தென் கொரிய நிறுவனமான பாஸ்கோ இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சுமார் 30,000 கோடி ரூபாய்கள் முதலீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
அம்மாநிலத்தின் கடக் பகுதியில் அமையவிருந்த ஒரு எஃகு ஆலைத் திட்டத்தை உள்ளூர் எதிர்ப்புகள் மற்றும் அனுமதிகள் வழங்குவதில் இருந்த தாமதங்கள் காரணமாக தாங்கள் கைவிடுவதாக பாஸ்கோ கூறியுள்ளது.
இந்த எஃகு ஆலையை அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடக் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன.
மிகப்பெரும் ஒரு திட்டமாக பார்க்கப்பட்ட இத்திட்டம் ரத்தாகியுள்ளது, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இந்திய அரசின் திட்டங்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சில விவசாயிகள் மற்றும் மதத் தலைவர்கள் தொழிற்சாலைக்காக நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்ததால் குறிப்பிடத்தகுந்த காலதாமதம் ஏற்பட்டது என்று பாஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆலைக்காக நிலங்களை எடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நின்று போனபிறகு அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்ளூரில் கிடைக்கும் இரும்புத் தாதுவைக் கொண்டு ஆண்டொன்றுக்கு 6 மில்லியன் மெட்ரிக் டன்கள் எஃகு உற்பத்தி செய்யும் வகையிலான ஒரு உடன்பாடு கர்நாடக அரசுக்கும் பாஸ்கோ நிறுவனத்துக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.
இந்த மாதத்தின் முற்பகுதியில் நிலங்களை கையப்படுத்தும் நடவடிக்கைக்கான முன்பணமாக பாஸ்கோ நிறுவனம் கொடுத்திருந்த பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை மாநில அரசு திரும்பி வழங்கியது.
எனினும் கர்நாடக மாநிலத்தில் சுமுகமாக வர்த்தகம் செய்யும் ஒரு சூழல் உருவானால் தமது நிறுவனம் அங்கு திரும்பும் எனவும் பாஸ்கோ தெரிவித்துள்ளது.
எனினும் இதைவிட இரண்டு மடங்குக்கும் மேலான முதலீட்டுடன் ஒதிஷா மாநிலத்தின் பாரதீப் பகுதியில் வரவுள்ளத் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் பாஸ்கோ உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டமாக ஒதிஷாவில் அமையவுள்ள ஆலை இருக்கிறது.
அதற்கும் ஆரம்ப கட்டத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. அந்த ஆலையின் மூலம் சுமார் 50,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -BBC