முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்த அரசு அனுமதி

An employee counts Indian currency notes at a cash counter inside a bank in Kolkataபுதுடில்லி : முக்கியமான சில தொழில்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்காக முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டிற்கான வரம்பை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

அந்நிய முதலீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு விதிகளை தொலைத்தொடர்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் தளர்த்தி உள்ளது. முதலீடுகளை கவருவதற்காகவும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிக்கச் செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது தொலைத்தொடர்பு துறையில் அந்நிய முதலீட்டிற்கான அளவு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 பில்லியன் டாலர்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று மற்றொரு முக்கிய துறையான இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டிற்கான உச்சவரம்பு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போன்று பெட்ரோலிய துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதம் வரையிலும், பாதுகாப்பு துறையில் 26 சதவீதம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்த்தப்படுவதால் மாநிலங்களில் கலை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு இதற்கான ஒப்புதலை அளிக்க உள்ளது. மத்திய அரசு இந்த முடிவு தொழில் துறை நிறுவனங்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

பல்நோக்கு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் உச்சவரம்பு 51 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும் என செப்டம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து மத்திய அரசு பெரும்பான்மையை இழந்து மைனாட்டி அரசு ஆனது.

இதனால் இழந்த அந்தஸ்தை மீண்டும் பெறுவதற்காக மத்திய அரசு, பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அரவிந்த் மாயாராமின் பரிந்துரைப்படி அந்நிய நேரடி முதலீட்டு உச்சரவரம்பை 74 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது, சர்வதேச சந்தையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதும் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு அதிகரிக்கக் காரணம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நேரடி அந்நிய முதலீட்டை பல துறைகளிலும் விரிவுபடுத்தியதற்கும், அதற்கான உச்சவரம்பை அதிகப்படுத்தவும் மம்தா பானர்ஜியும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

TAGS: