மதிய உணவு சுகாதாரம் : தமிழ்நாட்டின் நிலை எப்படி ?

india18713aஇந்தியாவின் பீஹார் மாநில பள்ளிக்கூடமொன்றில் மதிய உணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் இறந்த சம்பவம், மதிய உணவுக் கூடங்களில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விதிகள் எந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்புகிறது.

மதிய உணவுத்திட்டத்தை பல தசாப்தங்களாக அமல்படுத்திவரும் முன்னோடி மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில், இந்த திட்டம் தொடர்ந்து வந்த அரசுகளால், பலப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்துவருகிறது.

இந்த திட்டத்தை பாதுகாப்பாக அமல்படுத்த தேவையான அடிப்படைக் கட்டமைப்பு சத்துணவுக்கூடங்களில் இருக்கிறதா என்பது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி அவர்கள் வட மாநிலங்களில் இத்திட்டம் வேறு மாதிரியாக அமல்படுத்தப்படுகிறது என்றார்.

உதாரணத்துக்கு அந்த மாநிலங்களில் ஒரு மத்திய சமையல் கூடத்தில் பல நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்களுக்கு வேண்டிய மதிய உணவு சமைக்கப்பட்டு, அங்கிருந்து வேன்களில் இந்த உணவு வெவ்வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில், இது போன்று செய்யப்படுவதில்லை. சுமார் 50லிருந்து 100 மாணவர்களுக்கு தேவையான உணவு அந்தந்த பள்ளிக்கூடங்களில் மூன்று பேர் கொண்ட சத்துணவுப் பணியாளர் குழுவால் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவதால், பெரிய பிரச்சினைகள் எழுவதில்லை என்றார்.

ஆனாலும், விறகு அடுப்பைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் பல பள்ளிக்கூடங்களில் இருப்பதால், புகை, தீ போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று அவர் கூறினார். உணவில் பல்லி விழும் சம்பவங்களும் நடக்கின்றன என்றார். இதற்கு மாற்றாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை தந்து உதவ அரசைக் கோரி வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், குழந்தைகளுக்கு தட்டு போன்ற பாத்திரங்களை எவர்சில்வர் தட்டுகளாக வழங்கவும் அரசைக் கோரிவருவதாகவும், தற்போது குழந்தைகள் அவர்களின் வீடுகளிலிருந்து கொண்டுவரும் பாத்திரங்கள் எந்த அளவுக்கு சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பது குறித்து தங்களால் ஏதும் கூற முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தவிர, சத்துணவுப் பணியாளர்கள் , உணவை சுகாதாரமான முறையில் தயாரிக்குமாறு , சங்கத்தின் மூலமும், அரசின் மூலமும் அவ்வப்போது அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறினார் பழனிச்சாமி. -BBC

TAGS: