பீஹார் மரணங்கள் : விதிமுறை மீறப்பட்டது

india19713bபீஹார் மாநிலத்தில் மதிய உணவுக் கூடத்தில் உணவில் விஷக் கலப்பட சம்பவத்தில் 23 மாணவர்கள் இறந்ததை அடுத்து இந்த சம்பவத்தில் உணவுக் கலப்படம் எந்த கட்டத்தில் நடந்தது என்பதை அறிய நடத்தப்பட்டு வரும் தடயவியல் சோதனைகளின் முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று பீஹார் மாநில உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த பீஹார் மாநில கல்வித்துறையின் மதிய உணவுத்திட்ட இயக்குநர் ஆர்.லக்ஷ்மணன், இந்த மதிய உணவில் கலப்படம் யதேச்சையாக நிகழ்ந்த ஒன்றல்ல, வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டது என்று சில கிராமவாசிகள் கூறுவதால் இது குறித்து இந்த தடயவியல் சோதனையின் முடிவு தெளிவாக்கும் என்றார்.

இந்த சம்பவம் குறித்து போலிசார் இது வரை எவரையும் கைது செய்யவில்லை என்றும், விசாரணைகளின் பின்னரே அவர்கள் நடவடிக்கை வரும் என்று கருதுவதாகவும் கூறினார்.

இதனிடையே, மதிய உணவுத் திட்டம் பீஹாரில் அமல்படுத்தப்படுவது குறித்து விளக்கிய லக்ஷ்மணன், இந்தத் திட்டம்

பீஹாரில் 1995லிருந்து சுமார் 70,000 பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்படுவதாகவும், கூறினார்.

இத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தயாரிக்கப்பட்ட மதிய உணவை, மதிய உணவு அமைப்பாளர், தலைமை ஆசிரியர் அல்லது வேறொரு ஆசிரியர் ஆகியோரில் ஒருவர் சுழற்சி முறையில் தினமும், தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்படுவதற்கு முன் , அதை சுவைத்துப் பார்த்து, உணவு பரிமாறத் தகுதியானதா என்று அறிந்து கொண்ட பின்னரே , அது பரிமாறப்படவேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் இந்த விதியை அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை பின் பற்றவில்லை என்றார் அவர்.

இந்த தலைமையாசிரியை இப்போது தலைமறைவாயிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். -BBC

TAGS: