நாங்கள் காதலிப்பது உண்மை தான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக் கொண்டுள்ளனர்.
கொலிவுட்டில் வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.
இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கொலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஹன்சிகாவை காதலிக்கிறீர்களா? என்று சிம்புவிடம் கேட்டபோது, என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ஹன்சிகாவிடம், சிம்புவை காதலிக்கிறீர்களா? என்று கேட்ட போது மறுத்து வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்த போது கூட சிம்புவை காதலிக்கவில்லை என்று அவர் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவை காதலிப்பதாக கூறியிருந்ததால் கொலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தனது டுவிட்டரில் பக்கத்தில், என் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பலவித வதந்திகள் பரவி வருகிறது.
அதை நான் சரி செய்ய விரும்புவதாகவும், நான் எஸ்.டி.ஆரை (சிம்பு) காதலிப்பது உண்மை தான் என்றும் குறிப்பிட்டுள்ளாராம்.
இந்த கருத்தினை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எடுத்துப் போட்டதுடன் தானும் காதலிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளாராம்.
மேலும் சிம்பு, ஆமாம் ஹன்சிகாவை காதலிப்பது உண்மை தான். எங்களது இருவீட்டு பெற்றோரும் சந்தித்து பேசி எங்கள் திருமணம் பற்றி முடிவு செய்வார்கள்.
எங்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு மதிப்பளித்து யாரும் இதில் தலையிட வேண்டாம் என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.