இந்துத்துவ தலைவர்களின் கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவு

india21713cகடந்த ஒருமாதத்தில் தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட பாஜக மற்றும் இந்துமுன்னணி தலைவர்கள் இருவரின் கொலைகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவை நியமிப்பதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

தமிழக அரசு அமைத்திருக்கும் இந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவானது கடந்த வெள்ளியன்று (ஜூலை19,2013) இரவு தமிழக பா.ஜ.க. பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், ஜூலை ஒன்றாம் தேதி வேலூரில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்கும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்திருக்கிறது.

இந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவானது சி.பி.சி.ஐ.டி. காவல்துறையின் மேற்பார்வையில் விசாரணையை நடத்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமேஷின் படுகொலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் மு கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ரமேஷின் கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை தமிழக காவல்துறையினர் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம்-நாமக்கல் மண்டல பா.ஜ.க மகளிரணி செயலர் ராஜேஸ்வரி ( வயது 45 ) தீக்குளித்ததாகவும், சிகிச்சை பலனின்று அவர் இறந்துவிட்டதாகவும், பாஜக கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்து இயக்கத்தலைவர்கள் தொடர்ந்து குறிவைத்து கொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் வருவதாக குற்றம் சுமத்தியிருக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இதை கண்டிக்கும் நோக்கத்தில் நாளை திங்கட்கிழமை (ஜூலை 22, 2013) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார். -BBC

TAGS: