ஆட்சி முடியும் நிலையில் உள்ள அரசுகள் சாதனைகளை விளம்பரப்படுத்த தடை

india congress partyபுதுடில்லி : ஆட்சிக் காலம் முடியும் நிலையில் உள்ள அரசுகள், தனது ஆட்சியின் கடந்த கால சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதிக்க சட்ட கமிஷன் முடிவு செய்துள்ளது.

இது மக்கள் அரசிற்கு செலுத்தும் கோடிக்கணக்கான வரிப்பணத்தை வீணாக செலவிடும் விதமாக உள்ளதாகவும், தேர்தல் விளம்பரத்திற்கு அரசு பணத்தை செலவிட கூடாது எனவும் சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது.

தேர்தல் துறையில் சில சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ள சட்ட கமிஷன், அதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட வருகிறது. இந்த மாற்றங்கள் குறித்து தங்களின் கருத்துக்களையும், பதில்களையும் ஜூலை 31ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளையும் சட்ட கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த புதிய ஆலோசனையில், ஆட்சி காலம் முடிவடைய 6 மாதங்கள் இருக்கும் போது அரசு தனது கடந்த கால சாதனைகளை மையப்படுத்தி விளம்பரத்தை வெளியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்ற வளர்ச்சி குறித்து விளம்பரப்படுத்த ரூ.630 கோடி செலவிட்டுள்ளது.

நவம்பர் மாதம் 4 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக டில்லியில் தற்போதே பிரசாரம் துவங்கி உள்ளது. இதில் மக்கள் பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவதாக பா.ஜ., விற்கும் ஆளும் கட்சிக்கும் மோதல் வெடித்து வருகிறது. இது போன்ற விவகாரங்களை தடுப்பதற்காகவே இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாக சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது.

டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மக்கள் பணத்தை தனது தனிப்பட்ட காரியங்களுக்காக முறைகேடாக செலவிட்டு வருவதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது. இந்த முறைகேடுகள் 2008ம் ஆண்டு டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது இருந்தே நடைபெற்று வருவதாக பா.ஜ., தெரிவித்துள்ளது.

அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது, தனது ஆட்சி காலம் முடியும் வேளையில், 2004ம் ஆண்டு இறுதியில் இந்தியா ஒளிர்கிறது பிரசாரத்திற்கான அரசு பணத்தை செலவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரத்திற்காக பணத்தை தாராளமாக செலவிட்டு வருகின்றன. தேர்தல் சமயததில் நடைபெறும் இத்தகைய அரசு பண விரயம் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்த புதிய கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக அரசு அல்லாத அமைப்புக்களுடன் சட்ட கமிஷன் ஆலோசித்து வருகிறது. அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உட்படுத்தி அவற்றின் பிரசார செயல்பாடு மற்றும் நிதி செலவு குறித்த தகவல்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என ஜனநாயக சீர்திருத்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

வேட்பாளர் அல்லது அவர் சார்ந்த கட்சி செலவிடும் தொகை குறித்து கண்காணிக்க சட்ட கமிஷன் முடிவு செய்துள்ளது. அரசியல் கட்சிகள் பெறும் தேர்தல் நன்கொடைகள் ரூ.20,000க்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என தேர்தல் கமிஷனும் தடை விதித்துள்ளது.

தற்போது இது பெயரலவிலேயே இருப்பதாகவும், நன்கொடைகளில் 95 சதவீதம் சிறிய அளவிலான நன்கொடைகளாகவே உள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மக்கள் நலனுக்காக தேர்தல் நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவது வரவேற்கதக்கது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இந்த புதிய தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வெளியிட்ட குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்ற தீர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.Click Here

TAGS: