நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர்

narendra modiநியூயார்க்: நாடு முழுவதும் பிரபலமான ஒரே தலைவர் நரேந்திர மோடி என பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதன் மூலம் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பா.ஜ., கூட்டத்தில் அக்கட்சியின் பிரசார குழுத்தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்படுவார் என பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்ட மோடி, தனது பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.,வின் தேர்தல் பிரசார கமிட்டியும் அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில், முதல்வர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் முரளி மனோகர்ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த கமிட்டிக்கு உதவியாக 20 துணை கமிட்டிகளும் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், நியூயார்க் நகரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கட்சி தலைவராக இருப்பவர் தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. வரும் 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில், பா.ஜ.,வை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என தனக்கு ‌‌பணி வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ., வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றிவிட்டு, தனது பதவிக்காலத்தில் பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என விரும்புவதாக கூறினார்.

மேலும் அவர், பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ., பிரசார குழுத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் வழக்கத்திற்கு மாறானது ஒன்றும் இல்லை. மற்ற கட்சிகளை போல் நாங்களும் மோடியை நியமித்துள்ளோம்.

மோடிக்கு உள்ள புகழ், பெயர் ஆகியவை காரணமாக தான் பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு குஜராத்தில் மட்டும் மக்கள் ஆதரவு உள்ளது என எண்ண வேண்டாம். அவருக்கு தமிழகம், ஆந்திரா, உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் மக்கள் ஆதரவு உள்ளது.

வடக்கு முதல் தெற்கு, கிழக்கு முதல் தெற்கு வரையிலும் என நாடு முழுவதும் பிரபலமான ஒரே தலைவர் நரேந்திர மோடி தான். அவருக்கு கிடைத்திருக்கும் புகழ், பா.ஜ.,வை தேர்தலில் வெற்றி பெற வைக்கும்.

தற்போது ஊழல் நிறைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை, கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுடன் ஓப்பிட்டு பார்த்ததில், பா.ஜ., தான் சிறந்த கட்சி என மக்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களில் சிறந்த நிர்வாகம் தரப்படுவதை மக்கள் பார்க்கின்றனர். இந்த மாநிலங்களில் 24 மணி நேர மின்சாரம் வழங்கப்படுகிறது.

நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகம் உள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட பா.ஜ., ஆளும் மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பா.ஜ.,வை மக்கள் விரும்ப துவங்கியுள்ளனர்.

லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சியில் அமைப்பு ரீதியிலும், பூத் அளவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடிமட்ட அளவில் கட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்நத 10 வருடங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் சாதனை என்ன? ஊழல் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதே காங்கிரசின் சாதனையாக உள்ளது.

குஜராத் , ம.பி., மற்றும் சத்தீஸ்கரின் வளர்ச்சி விகிதங்கள் 10 சதவீதம் உள்ள நிலையில், மத்திய அரசு 5 சதவீதம் அல்லது அதற்கு கீழ் எனக்கூறி ஏமாற்ற முடியாது. மககள் தெளிவாக உள்ளனர்.

சட்டசபை தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள் காட்டிலும் பார்லிமென்ட் தேர்தல் வேறுமாதிரியானது. பார்லிமென்ட் தேர்தலில் நிலையான அரசு அமைய மக்கள் ஓட்டுப்போடுவார்கள்.

காங்கிரஸ் அரசு வி‌ரைவில் அகற்றப்படும். பா.ஜ., மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும். சிறந்த நிர்வாகம் மற்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் கட்சியே ஆட்சிக்கு வரும் முடியும்.

அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த அரசு தூக்கி எறியப்படும். மக்கள் மாற்றத்தை விரும்பினால் அதற்கு தீர்வாக பா.ஜ., இருக்கும். வரும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு போதிய பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும். அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளை நாங்கள் மறக்க மாட்டோம். எதிர்காலத்தில் இன்னும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம் என கூறினார்.

TAGS: