தெலுங்கானா மாநில அறிவிப்பு விரைவில் வெளியீடு

india24713aஇம்மாதம், 31ம் தேதி அல்லது ஆக., 3ம் தேதி, காங்கிரஸ் உயர்மட்டக் குழு டில்லியில் கூடுகிறது. அந்தக் கூட்டத்தில், தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன், ஆந்திர மாநில சபாநாயகர் மனோகர், டில்லி வந்திருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், மாநில பொறுப்பாளர் திக்விஜய் சிங் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோருடன், அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, ஆந்திர மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது என்றும், அதில் தெலுங்கானா குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவது என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரில், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கான தீர்மானத்திற்கு, ஒப்புதல் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், தெலுங்கானா பகுதியில் உள்ளடங்கியிருக்கும் நகரங்கள், எல்லைகள் போன்ற முக்கிய விஷயங்களில், இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, ராயலசீமா பகுதியில் உள்ள சில பகுதிகளை, தெலுங்கானாவுடன் இணைப்பதா, வேண்டாமா என்பதில், குழப்பம் நீடிக்கிறது. அனந்தபூர், கர்னூல் பகுதிகளை, தெலுங்கானாவுடன் சேர்த்தால் தான், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதிக்கத்தை தகர்க்க முடியும்.

அது போல், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் செல்வாக்கையும் குறைக்க முடியும் என, குலாம்நபி ஆசாத் மற்றும் ஜெய்பால் ரெட்டி போன்றவர்கள் வலியுறுத்திஉள்ளனர். அப்பகுதி முஸ்லிம்களும், இந்த இரு பகுதிகளையும், தெலுங்கானாவுடன் இணைப்பதையே விரும்புகின்றனர்.

ஏனெனில், இந்த பகுதிகளில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், ஐதராபாத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும், ஒரே மாநிலத்திற்குள், பலம் பொருந்திய சக்தியாக விளங்க முடியும் என, முஸ்லிம் அமைப்புகள் கருதுகின்றன.

ஆனாலும், இதற்கு மாறாக, வேறு சில கருத்துக்களும் காங்கிரசில் விவாதிக்கப்படுகின்றன. ராயலசீமா பகுதிகளை பிரித்து, தெலுங்கானாவில் சேர்த்தால், அந்தப் பகுதிகளிலும், ஜெகன் மோகன் ரெட்டி பலம் பெறக்கூடும். அப்போது, அவரது ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்றும், ஒரு சில தலைவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், மேற்கு கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள, பிரசித்தி பெற்ற பத்ராசலம் ராமர் கோவிலை, பிரிக்கப்படாத ஆந்திராவுடனேயே வைத்திருப்பது என்றும், முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

ஐதராபாத்தையே, இரு மாநிலங்களுக்கும், பொதுவான தலைநகரமாக ஆக்குவது பற்றியும், உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. அந்த நகரத்தை, யூனியன் பிரதேசமாக ஆக்கலாமா என்ற, யோசனையும் காங்கிரஸ் வசம் உள்ளது.

எப்படி இருந்தாலும், தனி மாநிலம் உருவாக்கப்பட்ட பின், சில மாதங்களுக்கு, இரு மாநிலங்களிலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரத்தை, மத்திய அரசே வைத்திருக்கவும், முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS: