லஞ்சம் தர முன்வந்ததை வெளியிடுவேன்: “மாஜி’ ராணுவ தளபதி வி.கே.சிங் மிரட்டல்

india26713aபுதுடில்லி: “”ராணுவத்துக்கு, “டாட்ரா ‘வாகனங்கள் கொள்முதல் செய்ததில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, லஞ்சம் கொடுக்க முன்வந்தது தொடர்பான ஆவணங்களை, வெளியிடுவேன்,” என, ஓய்வு பெற்ற ராணுவ தலைமைத் தளபதி, வி.கே.சிங் எச்சரித்துள்ளார்.

இந்திய ராணுவத்துக்கு, “டாட்ரா’ வாகனங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, தேஜிந்தர் சிங், தன்னிடம், 14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன் வந்தார் என, ராணுவ தலைமைத் தளபதி, வி.கே.சிங், புகார் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த வழக்கு தொடர்பாக, மாஜி ராணுவ அதிகாரி, தேஜிந்தர் சிங் உட்பட பலரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இருப்பினும், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ராணுவ அதிகாரி, வி.கே.சிங் தெரிவித்த புகார் தொடர்பாக, கூடுதலாக எந்தவொரு தகவல்களையோ, ஆவணங்களையோ, அவர் சமர்ப்பிக்காததால், இந்த வழக்கு, விரைவில் முடித்துக் கொள்ளப்படும் என, சி.பி.ஐ., தரப்பில், சமீபத்தில், சூசகமாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வி.கே.சிங் கூறியதாவது: இந்த வழக்கை தங்களால் விசாரிக்க முடியவில்லை என, சி.பி.ஐ., கூறட்டும். நான் என்னிடமுள்ள ஆவணங்களை பகிரங்கமாகவே வெளியிடுகிறேன். இவ்வழக்கு தொடர்பான எல்லா ஆவணங்களும், சி.பி.ஐ.,யிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. இதற்கு மேல் எதுவும் தேவையில்லை.

என் அலுவலகத்திற்கு யார் வந்தாலும், அவர்களைப் பற்றி நான், நன்கு அறிந்திருக்க வேண்டும். அவர்களை வீடியோவில் படம் பிடித்து பதிவு செய்திருக்க வேண்டும். இதற்காக நான் ஐந்து சாட்சிகளையும் தயாராக வைத்திருந்திருக்க வேண்டும் என்பது போன்ற ஆவணங்களைத் தான், சி.பி.ஐ., எதிர்பார்க்கிறதா? இதில் ஏதோ தவறு இருக்கிறது. சி.பி.ஐ., என்னிடம் இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை. இவ்வாறு வி.கே.சிங் கூறினார்.

TAGS: