ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை: கொலையாளிகளை ஒரு வாரத்திற்குள் பிடிக்க உத்தரவு

india26713bசென்னை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும், “போலீஸ்’ பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் ஆகிய, நால்வரையும் ஒரு வாரத்திற்குள் பிடிக்க, போலீசிற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலூரில், ஜூலை 1ல், இந்து முன்னணி மாநிலச்செயலர், வெள்ளையப்பன்; சேலத்தில், 19ம் தேதி, பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர், கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, சி.பி.சி.ஐ.டி., – டி.ஜி.பி., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.,), விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்தில் வெடிகுண்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய, மதுரையைச் சேர்ந்த, “போலீஸ்’ பக்ருதீன், பிலால் மாலிக்; மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில்; நாகையைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகிய, நால்வரையும் தேடி வருவதாகவும், தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 20 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்றும், தமிழக போலீஸ் அறிவித்துள்ளது.

எஸ்.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., கரன் சின்ஹா, சேலம், வேலூரில் முகாமிட்டு, விசாரணை நடத்தி வருகிறார். இதில், இரண்டு கொலைகளுக்கான சதித்திட்டமும், சேலத்தில் வைத்து தீட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சதி வலை:
“போலீஸ்’ பக்ருதீன், பிலால் மாலிக், அபுபக்கர் ஆகியோரின் கூட்டாளியான, கிச்சான் புகாரி சேலம் சிறையில் இருந்த போது, இதற்கான சதி வலை பின்னப்பட்டுள்ளது.

நெல்லை, மேலப்பாளையத்தில், டாக்டர் செல்வகுமார் உட்பட, மூவரை கொன்ற வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவன் கிச்சான் புகாரி.

கிச்சான் புகாரியின் விரலசைவில், அந்தக் கொலைகளை செய்த கும்பலே, இந்த, இரண்டு கொலைகளையும் செய்து உள்ளதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிச்சான் புகாரி, பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். கிச்சான் புகாரியை, காவலில் எடுத்து விசாரிக்க, எஸ்.ஐ.டி., போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

நால்வரின் உண்மை முகம்:
தற்போது, தமிழக போலீசாரால் தேடப்பட்டு வரும், “போலீஸ்’ பக்ருதீன், “அல்-உம்மா’ அமைப்பைச் சேர்ந்த, இமாம் அலி, ஐதர் அலியை, போலீசார் கைது செய்து, சிறைக்கு கொண்டு செல்லும் போது, போலீஸ் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி, இருவரையும் மீட்டவன்.

அத்வானியின் விழிப்புணர்வு யாத்திரையில், பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு உட்பட, 22 வழக்குகள் இவன் மீது உள்ள நிலையில், 2011ம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ளான்.

மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், “போலீஸ்’ பக்ருதீனும், “அல்முஜாகிதீன் படை’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் கருதுகின்றனர். இதன் உறுப்பினர்கள், “தியாகப்படை’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான்.

தலைமறைவு:
தன், 20 வயதில் வன்முறையில் இறங்கியவன், மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில், கிச்சான் புகாரி கைது செய்யப்பட்ட நிலையில், பன்னாவும் அவனுடன் சேர்ந்து இன்னும், 5 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

இந்து முன்னணி பிரமுகர் மனைவியை, தபால் வெடிகுண்டு மூலம், கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான, நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், 18 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளான்.

இவனது உருவம் தெரியாத நிலையில், தொழிற்பயிற்சி நிலையத்தில், அளித்த புகைப்படம் மூலம் போலீசார் தற்போது தேடி வருகின்றனர். இவர்கள் நால்வரையும், ஒரே வாரத்தில் பிடிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தற்போது தமிழகம் முழுவதும் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

TAGS: