இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நாசமடைந்த பயிர்களுக்காக மிகக் குறைவான( 2 ரூபா வரை) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதையிட்டு விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர்.
அரசு தம்மை இழிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ள பல விவசாயிகள், தமக்கு வழங்கப்பட்டுள்ள காசோலையை மாற்றவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளை அரசு ‘குரூரமாக கேலி’ செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் இந்த இழப்பீட்டை விமர்சித்துள்ளனர்.
ஆனால், இழப்பீடு வழங்குவதில் அரசு நியாயமாகத் தான் நடந்துகொண்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஓர் ஏக்கருக்கு 3.500 ரூபா என்ற அடிப்படையில் இழப்பீட்டைக் கணித்து, ஒரு கோடி 14 லட்சத்தை விவசாயிகளுக்கு அரசு பகிர்ந்தளித்துள்ளதாக மாநிலத்தின் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹுடா தெரிவித்துள்ளார்.
ஆனால், 2 ரூபா முதல் 6 ரூபா வரையில் வழங்கப்பட்ட காசோலைகள் பல விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் காசோலையை மாற்றுவதற்காக நகரத்துக்குச் செல்வதற்கும் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் வங்கிக் கணக்கை ஆரம்பிக்கவும் இந்தக் காசோலையின் பெறுமதியை விட கூடுதல் பணம் செலவாகும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
2011-ம் ஆண்டில், ஹரியானா மாநிலத்தின் ஜாஜ்ஜார் மாவட்டத்தை மழைவெள்ளம் தாக்கியபோது, பெருமளவிலான விவசாயிகளின் பயிர்ச் செய்கைகள் அழிந்துபோனமை குறிப்பிடத்தக்கது. -BBC