குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு சீட் தர முடியாது:ராகுல்

rahul-gandhiபுதுடில்லி : குற்ற பின்னணி கொண்டிருக்கும் வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் சீட் தர முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐந்து மாநில தேர்தல்கள் குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய போது ராகுல் இதனை தெரிவித்துள்ளார்.

டில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

தேர்தலை சந்திக்க தயாராவது குறித்து ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், நிர்வாகக் குழு தலைவர்கள் ஆகியோரு‌டன் ராகுல் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தேர்தல் பிரசாரம், கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் கட்சியினருடன் பேசிய ராகுல், குற்ற பின்னணியைக் கொண்டவர்களுக்கு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்த குற்றத்திற்காக கோர்ட்டின் கண்டிப்பிற்கு ஏற்கனவே ஆளானவர்களுக்கும் சீட் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் சமீபத்தில், குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அல்லது தண்டனை பெற்ற எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலில் கிரிமினல் குற்றங்களை தடுப்பதற்காக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாகவே ராகுல் இத்தகையதொரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

வேட்பாளர்களை டில்லியில் இருப்பவர்களோ அல்லது கட்சி மேலிடமோ எடுக்காது எனவும்; கட்சியின் வட்டார தலைவர்கள் யார் எம்.எல்.ஏ., ஆக வர வேண்டும், அவர்களின் செயல்பாடுகள் குறித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

TAGS: