லக்னோ: எய்ட்ஸ் காரணமாக மரணமடைந்த தம்பதியினருக்கு பிறந்த 5 குழந்தைகளை கிராமத்தை விட்டே விரட்டி சுடுகாட்டிற்கு அனுப்பிய கொடுமை உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய சோதனை நடத்தி தேவையான உதவிகள் செய்யப்படும் என மாநில அகிலேஷ் அரசு அறிவித்துள்ளது.
உ .பி., மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எய்ட்ஸ் காரணமாக கணவன் , மனைவி இறந்து விட்டனர். இவர்களுக்கு ஒரு பெண் உள்பட 5 குழந்தைகள் உள்ளனர்.
இதில் குறைந்த வயது 7 ஆகும். சுடுகாட்டில் ஒரு மரத்துக்கடியில் கால் முறிந்த கட்டிலில் தங்களின் வாழ்க்கையை நடத்தும் இந்தக்குழந்தைகள் கூறுகையில்:
எங்களின் பெற்றோர்கள் மறைவுக்கு பின்னர், எங்களுக்கும் எய்ட்ஸ் இருக்கும் என்ற அச்சத்தில் , எங்கள் உறவினர்கள் எங்களை ஒதுக்கினர். இதனால் நாங்கள் இங்கு வாழ்கிறோம். சில நேரங்களில் கிராம மக்கள் எங்களுக்கு ஏதாவது உணவு கொடுப்பார்கள். இதனை சாப்பிட்டுத்தான் வாழ்கிறோம் என்று பரிதாபத்துடன் கூறினர்.
இந்த செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதும் , மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இங்கு அவர்களுக்கு முழு அளவில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தேவையான உதவிகள் செய்யப்படும், இவர்களுக்கு இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என்றனர் அதிகாரிகள் .
மேலும் இந்த கிராமத்தில் எய்ட்ஸ் தடுப்பு தொடர்பான பாதிப்பு மற்றும் பிரச்னைகள் குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றனர்.
இந்த தகவல் கேட்டறிந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அவசர உத்தரவில் ; குழந்தைகள் அனைவருக்கும் வங்கிகணக்கு துவக்கி அவர்களுக்கு தலா ஒரு லட்சம் டிபாசிட் செய்யப்படும்.
மேலும் அவர்கள் பாதுகாப்பாக வாழ அரசு விடுதிக்கு அனுப்பி வைக்கப்படுவர். இவர்களுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் அடையாள ரேசன் அட்டை வழங்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.