மெட்ராஸ் கஃபே! இதுவா சட்டம் – ஒழுங்கு? – சீறும் சீமான்!

MADRAS_CAFE21பிரபல நடிகரான ஜான் ஆப்ரஹாம் நடித்து இயக்கியுள்ள “மெட்ராஸ் கபே’ திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் ஆகஸ்டில் வெளியாகிறது.

மும்பையில் தணிக்கை செய்யப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது மெட்ராஸ் கபே.! இந்தப் படத்தை தடை செய்ய வேண்டுமென்கிற அளவுக்கு தமிழீழ உணர்வாளர்களிடம் ஆவேசம் தெறிக்கிறது.

இதன் ஒருகட்டமாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர் நாம் தமிழர் கட்சியினர்.

இந் நிலையில் பொலிஸாரால் கைதாகி விடுதலையான அக்கட்சியின் தலைமை ஒருங்ெகிணைப்பாளரான இயக்குநர் சீமானிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“மெட்ராஸ் கபே’ படத்துக்கு தடை கோரியிருக்கிறீர்களே?

தமிழீழ விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் போலவும், தமிழர்களை மனிதக் கேடயமாக புலிகள் பயன்படுத்தினர் என்றும் அந்த படத்தில் சித்தரித்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.

புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல. தமிழின விடுதலைக்கான இயக்கம் அது. உலகின் எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திற்கும் இல்லாத வரலாறு புலிகள் இயக்கத்திற்கு உண்டு. புலிகளைத் தவிர, மற்ற விடுதலைப் போராளி இயக்கங்களில் தரைப்படை மட்டுமே இருந்தது.

ஆனால், முப்படைகளையும் வழி நடத்தி ஒரு ஜனநாயக நாட்டை தமிழீழத்தில் கட்டி எழுப்பியவர் எமது தேசிய தலைவர் பிரபாகரன் மட்டுமே.

இறுதிக்கட்ட போரில் ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்களை கொன்றழித்தார் ராஜபக்ச. வான்வழி தாக்குதல் மூலம் எமது உறவுகளை கொத்துக் குண்டு போட்டு அழித்துள்ள நிலையில், அதை தடுக்க மக்களை மனித கேடயமாக எப்படி பயன்படுத்தியிருக்க முடியும்? ஒவ்வொரு மக்களையும் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டா குண்டுகளை எதிர்கொண்டார்கள் போராளிகள்?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நேர்மையையும் அவர்கள் கட்டமைத்த ஒழுங்கையும், கடைப்பிடித்த போர் நெறிகளையும் உடைக்க முடியாமல் திணறுகிறார் கொடுங்கோலர் ராஜபக்ச.

இதனை உடைப்பதற்காகவே, புலிகள் இயக்கத்தைப் பற்றி பொய்யான தகவல்களை உலக அரங்கிற்கு சொல்ல ராஜபக்சேவின் அரச பயங்கரவாதம் முயற்சிக்கிறது. அந்த முயற்சிகளுக்கு திரைத்துறையை பயன்படுத்துகிறார் ராஜபக்ச.

அவரின் நரித்தனத்திற்கு இந்தி திரைப்படத் துறையினர் விலை போகிறார்கள். அந்த வகையில், எட்டரை கோடி தமிழர்களின் ஊணோடும் உணர்வுகளோடும் பிணைந்து கிடக்கும் புலிகள் இயக்கத்தைக் கொச்சைப் படுத்துவதையும் திரித்துக் கூறுவதையும் ஏற்க முடியாது என்பதால்தான் தடை கேட்கிறோம்.

திரையிடுவதற்கு முன்பு எங்களுக்கு அந்தப் படம் போட்டுக் காட்டப்பட வேண்டும். இயக்கத்திற்கு எதிராக எந்த காட்சிகளும் இல்லையெனில், அப்படம் திரையிட எங்களுக்கு ஆட்சேபனை இல்லை

அதேசமயம் இயக்கத்திற்கு எதிராக இருந்தால் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த ஒரு மூலையிலும் இந்த படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தேனும் படத்தை தடுத்து நிறுத்துவார்கள் நாம் தமிழர் இயக்கத்தினர்.

seemanராஜபக்சவின் சதிகளுக்கு இந்தி திரைப்படத் துறையினர் விலை போகிறார்கள் என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்?

மெட்ராஸ் கபே’ படத்துக்கு முதலில் வைத்த பெயர் ஜாப்னா. அதாவது யாழ்ப்பாணம். இந்த படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான ஜான் ஆப்ரஹாம், ஒரு மலையாளி. மலையாளிகளுக்கும் சிங்கள ஆட்சிப்பீடத்திற்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பும் உறவும் உண்டு.

ஈழத் தமிழினத்திற்கும் தமிழக தமிழினத்திற்கும் இந்திய அரசு எதிராக செயல்பட வேண்டுமாயின் மலையாள அதிகாரிகளைக் கொண்டுதான் காரியம் சாதிப்பார்கள் சிங்களவர்கள். இந்திய ஆட்சி அதிகாரத்தை இதுகாறும் பயன்படுத்திக் கொண்ட ராஜபக்ச, தற்போது திரை ஊடகம் சார்ந்து தன் சதி வலைகளை பின்னத் தொடங்கியிருக்கிறார்.

அதன் ஒரு முயற்சியாகத்தான், ஜான் ஆப்ரஹாமை இலங்கைக்கு அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வித்த ராஜபக்ச, புலிகள் இயக்கத்திற்கு எதிராக இப்படி ஒரு படம் வரவேண்டும் என்று தனது திட்டத்தை விவரிக்கிறார். அதனை ஏற்றுக்கொள்கிறார் ஆப்ரஹாம்.

படத்திற்கான நிதியும் ராஜபக்ச தர, படம் எடுத்திருக்கிறார் அவர். படத்தின் தயாரிப்பாளர் ஜான் ஆப்ரஹாம் என்றாலும் அசல் தயாரிப்பாளர் ராஜபக்சதான்.

இயக்குநர் மணிவண்ணனின் படத்திறப்பு மற்றும் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொள்ளவிடாமல் உங்களை காவல்துறை கைது செய்தது பற்றி?

ஐயா மணிவண்ணனின் படத்திறப்பு விழாவை விழுப்புரத்தில் ஒரு அரங்கத்தில் வைத்திருந்தோம். இதற்காக சென்ற என்னை கைது செய்தது காவல்துறை. காரணம் கேட்ட போது, விழாவிற்கு அனுமதி இல்லை என்று சொன்னார்கள்.

அதற்கு நான், “நாங்கள் பொதுக்கூட்டம் நடத்தவில்லை. அரங்கத்தினுள் நடத்துகிறோம். இது எங்கள் குடும்ப நிகழ்வு. இதற்கு எதற்கு அனுமதி? தேவையில்லை’ என்று விளக்கம் தந்தேன்.

உடனே அவர்கள், “மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருக்கு. நீங்கள் கூட்டத்தில் பேசினால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும்.

அதனால் அரெஸ்ட் செய்கிறோம்’ என்று சொல்லி அழைத்துச் சென்றுவிட்டு, இரவு எட்டு மணி வரை எங்களை என்ன செய்வது என தெரியாமல் பிறகு விடுதலை செய்தனர்.

எங்களை கைது செய்து எங்களது உரிமையை பறித்துள்ளது காவல்துறை. மக்களைச் சுதந்திரமாக இருக்க வைத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அதுதான் ஒரு அரசின் கடமை.

அதற்கு மாறாக, யாரும் வெளியில் நடமாடக்கூடாது, வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்கிற சிந்தனையில், மக்களை வீட்டினுள்ளே பூட்டி வைத்து விட்டுப் பாதுகாப்பதா சட்டம்-ஒழுங்கு?

காவல்துறையினரை விட எங்கள் கட்சியினர் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பவர்கள். நான் பேசுவதினாலேயே சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடுமெனில் இங்கு சட்டமும் ஒழுங்கும் பலவீனமாக இருக்கிறதென்று தான் அர்த்தம். ஜனநாயக சக்திகளை பேசவிடாமல் தடுப்பதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க முடியாது.

TAGS: