விவசாய பொருட்கள் விலை: பிரதமர் மன்மோகன் கவலை

manmohan-singhபுதுடில்லி : அதிகரித்து வரும் பணவீக்கத்தால், விவசாய விளைபொருட்கள் விலை உயர்ந்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ள, பிரதமர் மன்மோகன் சிங், இப்பிரச்னைகளைத் தீர்க்க, பொருளாதார நிபுணர்கள், தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார்.

டில்லியில், தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற காரணங்களால், விவசாய செலவுகள், கடந்த நான்கைந்து ஆண்டுகளில், 20 மடங்கு அதிகரித்துள்ளன என்று, பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:இந்த சமுதாயத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற நோக்கில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.

விவசாய விளைபொருட்களுக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்தது. இது போன்ற காரணங்களால், விவசாய விளைபொருட்களின் விலை அதிகரிக்கும் பட்சத்தில், இதற்கான மாற்று வழி குறித்து, பொருளாதார நிபுணர்கள் சிந்தித்து, தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். விவசாயத் துறைக்கு எது நல்லதோ, அது, இனிமேல் தான் நடைமுறைக்கு வர வேண்டும்.

பொருளாதார ஆய்வு என்பது, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது தீர்வு காண முடியாத, கடினமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக மட்டுமோ இருக்கக் கூடாது.

அத்துடன், இந்த ஆய்வு, பொருளாதார நிபுணர்களுக்கு, ஓர் எச்சரிக்கையாகவும், உலக அளவில், தந்திரம் நிறைந்த சில அரசுகளால், இவை, தவறாக புரிந்து கொள்ளப்படாமலும் இருக்க வேண்டும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

TAGS: