இந்தியாவின் முன்னாள் மகாராஜா ஒருவரின் சொத்துக்களுக்கான வாரிசுரிமையை அவரது மகள்கள் இரண்டு பேர் வென்றுள்ளனர்.
சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கான வாரிசுரிமையைக் கோரி 21 ஆண்டுகளாக நடந்துவந்த நீதிமன்ற போராட்டத்தில் பரிட்கோட் மகாராஜாவின் மகள்மார் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.
பரிட்கோட் மகாராஜா ஹரிந்தர் சிங் பிராரின் உயில் (உயிரிழக்க முன்னர் எழுதப்படும் இறுதி விருப்பாவணம்) மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அது செல்லாது என்றும் சண்டிகார் நகர நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, மகாராஜாவின் சொத்துக்கள் அனைத்தும் அவரது இரண்டு மகள்களுக்கே செல்ல வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஜாவின் உயில் என்று இதுவரை கருதப்பட்டுவந்த ஆவணத்தின்படி, அவரது சில பணியாளர்களாலும் அரண்மனை அதிகாரிகளாலும் உருவாக்கப்பட்ட நம்பிக்கை- பொறுப்புக் குழுவினாலேயே சொத்துக்கள் எல்லாம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன.
ஆனால் அந்த உயில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பல்வேறு நகரங்களிலும் உள்ள பெருமளவிலான சொத்துக்கள் மகாராஜாவின் வாரிசுகளுக்குச் செல்கின்றன.
சுமார் 350 ஆண்டுகள் பழமையான கோட்டை, 80 ஹெக்டேயருக்கும் அதிக பரப்பு கொண்ட விமான நிலையம், தங்க ஆபரணங்கள், பழைய காலத்து கார்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் இவற்றில் அடங்குகின்றன. -BBC