பெங்களூரு : “”இஸ்ரோவும், நாசாவும் இணைந்து, செயற்கை கோள்களை தயாரிப்பது குறித்து, பேச்சு நடத்தப்பட்டு வருகிறது,” என, இஸ்ரோ தலைவர், ராதாகிருஷ்ணன் கூறினார்.
இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்) தலைவர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது: செயற்கை கோள்களை வடிவமைப்பதில், மற்ற நாடுகளுக்கு, நாம், முன் மாதிரியாக திகழ்கிறோம்.
இதனால், அமெரிக்கா உள்ளிட்ட, பல்வேறு நாடுகள், இந்த விஷயத்தில் நம்முடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளன. இதுகுறித்து பேசுவதற்காக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, “நாசா’வின் நிர்வாக அதிகாரி, சர்லஸ் போல்டன் ஜூனியர், கடந்த மாதம், பெங்களூருக்கு வந்திருந்தார்.
அப்போது, “செயற்கை கோள்களை வடிவமைப்பதில், இரு நாடுகளும் இணைந்து செயல்படலாம்’ என, அவர் யோசனை கூறினார்.
இதுதொடர்பாக, இஸ்ரோ மற்றும் நாசாவைச் சேர்ந்த அதிகாரிகள், தொடர்ந்து பேசி வருகின்றனர். இரு நாடுகளும், இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என, விவாதிக்கப்பட்டு வருகிறது.
செயற்கை கோளின் சில பாகங்களை நாமும், மற்ற சில பாகங்களை அமெரிக்காவும் தயாரிப்பது தான், இந்த திட்டத்தின் நோக்கம். எந்த பாகங்களை, யார் தயாரிப்பது என்பது பற்றித் தான், தற்போது பேசப்படுகிறது.
இரு நாடுகளும் இணைந்து செயற்கை கோள்களை வடிவமைக்கும் திட்டம் வெற்றி பெற்றால், அது, சர்வதேச விண்வெளி வட்டாரத்தில், புதிய சகாப்தமாக இருக்கும்.
பேச்சுவார்த்தை வெற்றி பெற்று, செயற்கைகோள் தயாரிக்கப்பட்டால், அது, இந்தியாவிலிருந்து தான், விண்ணில் ஏவப்படும். இவ்வாறு, ராதாகிருண்ன் கூறினார்.