அமெரிக்கவாழ் இஸ்லாமிய அறிஞர் சென்னையில் நிகழ்த்தவிருந்த சொற்பொழிவு ரத்தானது தொடர்பில் கண்டங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ஆப்ரிக்க வம்சாவளி அமெரிக்கரான வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஆமினா வதூத் அவர்கள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி ஒன்றில் இஸ்லாம், பாலினம் மற்றும் சீர்திருத்தம் குறித்து உரையாற்றவிருந்தார்.
ஆனால் சில இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அந்த சொற்பொழிவுகள் ரத்து செய்யப்பட்டன.
சட்டம் ஒழுங்கு காரணங்களின் காரணமாகவே இதை ரத்து செய்யும்படி காவல்துறையினர் தமக்கு வாய்மொழியாக கூறினர் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கல்விகளுக்கான மையத்தின் தலைவர் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
தான் அறிவு ரீதியாக அவமானப்படுத்தப்பட்டதாக, ஆமீனா வதூத் வேதனை வெளியிட்டதாகவும் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஜூலை 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 28 ஆம் தேதி இரவு காவல்துறையினர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கூட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழக்கூடும் என்று கருதுவதால் அதை ரத்து செய்யுமாறு கூறினர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இஸ்லாம் குறித்த முழுமையாக புரிதல் இல்லாத காரணத்தால்தான் இப்படியான கருத்து பரிமாற்றங்களுக்கு எதிர்ப்புகள் எழுகின்றன என்வும் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.-BBC