தெலங்கானா உருவாக்கம் குளறுபடியில்தான் முடியும் – ராம்

ram_hinduசிறிய மாநிலங்களை உருவாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று கூறுகிறார் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான என்.ராம்.

சிறிய மாநிலங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்ட ஒரு உதாரணத்தை வைத்தே முடிவு செய்ய முடியும் அதை ஒரு பொதுப்படையான வாதமாக வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தை இரு மாநிலமாக உடைத்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது ஒரு சந்தர்ப்பவாத முடிவு, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அம்மாநிலத்தில் சரிந்து வருவதாக சமீபத்திய இடைத்தேர்தல் முடிவுகள் காட்டின. எனவே இதைத் தடுத்து நிறுத்த காங்கிரஸ் எடுத்துள்ள நடவடிக்கையே தெலங்கானா என்றார் ராம். ஆனால் இது ஒரு குளறுபடியில்தான் முடியும் என்றார் அவர்.

ஆனால் பல தசாப்தங்களாக தெலங்கானா உருவாக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராடி வருவது குறித்து கேட்டபோது, அந்தப் போராட்டம் ஒரு பிரதேச வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில் தெலங்கானா பிரதேசம் பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கவில்லை. இதை ஸ்ரீகிருஷ்ணா கமிஷனே கூட ஒப்புக்கொண்டது என்றார் ராம்.

இது போல சிறிய மாநிலங்களை உருவாக்குவதை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கிறதே என்று கேட்டபோது, அது தவறான கொள்கை , சித்தாந்த ரீதியில் அந்தக் கட்சி இதை ஒரு பொதுவான நிலைப்பாடாகக் கொள்வது தவறு என்றார். இது தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்ற இடது சாரிக்கட்சிகளின் கருத்தை அவர் ஆதரித்தார்.

தமிழகத்தில் இது போன்ற கோரிக்கைகள் சில குழுக்களால் எழுப்பப்பட்டு வருவது குறித்து கேட்டபோது, தமிழ்நாட்டில் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு இருக்காது. தமிழ்நாடு ஓரளவுக்கு முற்போக்கு சிந்தனையுள்ள மாநிலம், பொருளாதர வளர்ச்சி பெற்ற மாநிலமும் கூட, எனவே இதை உடைப்பதற்கான காரணிகள் ஏதும் இல்லை என்றார் ராம். -BBC

TAGS: