புதிய மாநிலங்கள் உருவானால் நாடு பலவீனமாகும்: ஹசாரே கண்டனம்

hazare-photoலக்னோ: “புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதால், நாடு பலவீனம் அடையும்’ என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம், அசம்கார் பகுதியில், மக்களிடையே லோக்பால் மசோதா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, “ஜனதந்த்ர யாத்திரை’ மேற்கொண்டுள்ளார்.

அப்போது, அவர் பேசியதாவது: பெரிய மாநிலங்கள் உடைக்கப்பட்டு, புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதால், நாடு பலவீனம் அடையும்.

ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் மத்திய அரசின் முடிவு தவறானது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, தனி மாநிலம் மற்றும் மாவட்டங்கள் கோரும் பலரையும் ஊக்கப்படுத்தும். அது, நாட்டை பலவீனமாக்கும் செயல்.

எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். நாட்டு மக்களின் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவர். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதும், லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, உண்ணாவிரதம் இருப்பேன். உ.பி.,யில், பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, துர்கா, “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதை, மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர் போன்ற நேர்மையான அதிகாரிகளை காண்பதே அரிதாகிவிட்டது. இவ்வாறு, ஹசாரே பேசினார்.

TAGS: