பெண் அதிகாரிக்கு சோனியா ஆதரவு: மத்திய அரசுக்கு பதிலடி தர சமாஜ்வாதி தயார்

durgasakthiபுதுடில்லி: உத்தர பிரதேசத்தில், மணல் மாபியாக்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுத்த, பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, “சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட விவகாரத்தால், உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாரி சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமருக்கு கடிதம் எழுதியதால், சமாஜ்வாதி கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், “உணவு பாதுகாப்பு மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற ஆதரவு தர மாட்டோம்’ என, அந்த கட்சி அறிவித்துள்ளது.

உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கிரேட்டர் நொய்டா மாவட்டத்தில், துணை கலெக்டராக இருந்த, துர்கா சக்தி நாக்பால், 28, என்ற, பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மணல் மாபியாக்களுக்கு எதிராக, அதிரடியான நடவடிக்கைளை எடுத்ததால் தான், இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

ஆனால், “விதிமுறைகளை பின்பற்றாமல், வழிபாட்டு தலத்தை இடித்ததன் காரணமாகவே, துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்’ என, உ.பி., அரசு அறிவித்தது. இதற்கிடையே, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, நரேந்தர் என்பவர், “உ.பி., அரசுக்கு, நான் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, துர்கா, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்’ என, தெரிவித்திருந்தார்.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, கைலாஷ் பதி என்ற மூத்த தலைவரோ, “மணல் மாபியாக்கள் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, துர்கா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என, உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

இந்த விவகாரம், தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சியினரும், இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

“துர்காவின் சஸ்பெண்ட்டை ரத்து செய்ய வேண்டும்’ என, வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “துர்கா மீது, பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கடமையைச் செய்யும் அதிகாரிகள், எந்தவித இடையூறுக்கும் ஆளாகக் கூடாது.

அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என, கூறியிருந்தார். இதைத் தொடந்து, “துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, உ.பி., மாநில அரசு அறிக்கை அளிக்க வேண்டும்’ என, மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதனால், சமாஜ்வாதி கட்சி தலைவர்கள், மத்திய அரசு மீது, கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சமாஜ்வாதி கட்சி, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசுக்கு, வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறது. இந்த கட்சிக்கு, லோக்சபாவில், 22 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில், எட்டு உறுப்பினர்களும் உள்ளனர்.

பார்லிமென்டில், மத்திய அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போதெல்லாம், ஆபத்பாந்தவனாக இருந்து, சமாஜ்வாதி கட்சி உதவுகிறது. தற்போது, “ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்கா சஸ்பெண்ட் விவகாரத்தின் மூலம், காங்., தலைமையிலான, மத்திய அரசு, தங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறதோ’ என்ற எண்ணம், அந்த கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், தங்கள் பங்கிற்கு, மத்திய அரசுக்கு பதிலடி கொடுப்பதற்கு, அக்கட்சி தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, நரேஷ் அகர்வால் நேற்று கூறியதாவது: காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, நில முறைகேட்டில் ஈடுபட்டதாக, அரியானாவைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா புகார் கூறினார். இதற்காக, அந்த அதிகாரி மீது, அம்மாநில காங்., அரசு நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பாக, அரியானா அரசிடம், காங்., தலைவர் சோனியாவும், மத்திய அரசும், விளக்கம் கேட்காதது ஏன்? இப்போது, துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஷயத்துக்கு மட்டும், உ.பி., அரசிடம், ஏன் விளக்கம் கேட்கின்றனர்.

காங்., மற்றும் மத்திய அரசின், இந்த இரட்டை நிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். பார்லிமென்டில் உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்படும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். இவ்வாறு, நரேஷ் அகர்வால் கூறினார்.

உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு, ஏற்கனவே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது, ஆளும் கட்சி கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும், சமாஜ்வாதி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

TAGS: