ராணுவ செலவை இந்தியா குறைக்க வேண்டும்: நவாஸ் ஷெரீப் வேண்டுகோள்

nawasஜெட்டா: “ஆயுதப் போட்டியைத் தவிர்க்க, இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ செலவை குறைக்க வேண்டும்,”என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், நிருபர்களிடம் கூறியதாவது: ஆயுதப் போட்டி இருக்கும் வரை, அமைதிக்கு வழியில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எனவே, இந்தியாவும், பாகிஸ்தானும், ராணுவ செலவை கணிசமாகக் குறைக்க வேண்டும்.

போரினால், பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். காஷ்மீர் விவகாரத்தில், அனைத்து கட்சிகளின் விரிவான ஆலோசனைக்கு பிறகு தான், ஒரு முடிவு மேற்கொள்ளப்படும்.

அண்டை நாட்டு விஷயத்தில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை, ஆப்கானிஸ்தான் விஷயத்தில் கடைபிடித்து வருகிறோம். அரசியலில் பழி வாங்கும் நடவடிக்கையில் எனக்கு நம்பிக்கையில்லை.

முஷாரப் வழக்கு கோர்ட்டில் இருப்பதால், அது தொடர்பாக மேற்கொண்டு பேச விரும்பவில்லை. ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எனவே, ஈரானிலிருந்து, பைப் லைன் மூலம் எரிவாயுவை நாம் பெற்றால், “கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, அமெரிக்கா, பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறினார்.

TAGS: