ஜம்மு: காஷ்மீரில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவத்தினர், லஷ்கர் பயங்கரவாதிகள் உதவியுடன், துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும், கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த அத்துமீறல் குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள மத்திய அரசு, பாகிஸ்தான் தூதரை அழைத்து, தன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
காஷ்மீரில், இந்தியா – பாக்., எல்லை பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ளன; ஆனாலும், பாகிஸ்தான் ராணுவம், இந்த ஒப்பந்தத்தை மதிப்பது இல்லை.
காஷ்மீர் வழியாக, பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக, இந்திய ராணுவத்தினர் மீது, அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. ஜனவரியில், காஷ்மீரின், பூஞ்ச் பகுதி அருகே, எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய வீரர்கள் மீது, பாக்., ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
அப்போது, இந்திய வீரர்கள் இருவரை சுட்டு கொன்றதோடு, அவர்களின் தலைகளையும் வெட்டி எடுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, எல்லை பகுதியில் பதற்றம் நிலவியது. பாக்., அரசுடனான அமைதி பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, சமீபத்தில் பாகிஸ்தானில் தேர்தல் நடந்தது. நவாஸ் ஷெரீப், புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை, மீண்டும் துவங்கும் என்றும், இதன் ஒரு பகுதியாக, இரு நாட்டு பிரதமர்களும், அடுத்த மாதம், நியூயார்க்கில் நடக்கும், ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தின் போது, சந்தித்து பேசுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று அதிகாலை, காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில், சர்வதேச எல்லை கட்டுப்பாட்டுக்கு அருகே, இந்திய எல்லையில், பீகார் ரெஜிமென்ட் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 20க்கும் மேற்பட்ட, பாக்., ராணுவத்தினர், பயங்கரவாதிகள் உதவியுடன், சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய வீரரர்கள் மீது, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இதில், இந்திய வீரர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தாக்குதலை நடத்தி விட்டு, பாக்., வீரர்கள், தங்கள் எல்லைக்குள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம், நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பினரும், கண்டனம் தெரிவித்துள்ளனர்.