பாகிஸ்தானிலிருந்து துரத்தப்பட்டார் தாவூத்!

dawood_ibrahimநிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுவிட்டார் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலர் ஷாரியார் கான் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் இருந்தார் என்பதை பாகிஸ்தான் மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் விதமாக அவரது பேச்சு அமைந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றிய புத்தக அறிமுக நிகழ்ச்சி இந்திய பத்திரிகையாளர்கள் சார்பில் லண்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் பேசியது:

தாவூத் பாகிஸ்தான் இப்போது இருந்தால் அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். ஆனால் அவர் பாகிஸ்தானிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுவிட்டார் என்று எண்ணுகிறேன். தாவூத் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கிரிமினல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீஃப் அரசு கருதுகிறது. பாகிஸ்தான் மட்டுமல்லாது, இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற எந்த ஒரு நாட்டுக்கும் பாதகம் விளைவிக்கின்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதுபோன்ற குற்றவாளிகள் பாகிஸ்தானில் இருக்க அனுமதிக்க கூடாது.

அப்படிப்பட்டவர்கள் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இந்தக் காரணத்தால்தான் தாவூத் இப்போது பாகிஸ்தானில் இருக்க முடியாது என்று சொல்கிறேன் என்றார் அவர்.

தலிபான்கள் இடையே மிதவாதிகளிடம் பேச்சு நடத்த வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது.

ஆனால் தலிபான்களில் பெரும்பான்மையானவர்கள் மிதவாதிகள் அல்ல. பாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான்களில் மிதவாதிகள் அதிகம் இல்லை.

ஆயினும் அவர்களுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்று அவர் கூறினார்.

TAGS: