கோர்காலாந்து தனி மாநில கோரிக்கை: போராட்டக்காரர்களுக்கு மம்தா கெடு

mamataகோர்காலாந்து தனி மாநிலம் கோரி நடந்து வரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை 72 மணி நேரத்துக்குள் நிறுத்தாவிட்டால் கோர்கா ஜன முக்தி மோர்ச்சா அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மேற்கு வங்க மாநிலத்தை பிரித்து கோர்காலாந்து தனி மாநிலம் அமைக்கக்கோரி கடந்த 8 நாள்களாக டார்ஜிலிங்கில் கோர்கா ஜன முக்தி மோர்ச்சா அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனால் டார்ஜிலிங் நகரில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள கடைகள்,வணிக நிறுவனங்கள், அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் கோர்காலாந்து தனி மாநில போராட்டம் தொடர்பான பொதுநல வழக்கில் கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதிகள், டார்ஜிலிங்கில் இயல்புநிலை திரும்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

72 மணி நேர கெடு: இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

கோர்காலாந்து தனி மாநிலம் கோரி நடந்து வரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை கோர்கா ஜன முக்தி மோர்ச்சா அமைப்பினர் 72 மணி நேரத்துக்குள் நிறுத்தாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.நான் கடந்த 8 நாள்களாக பொறுத்துப் பார்த்து விட்டேன்.

நான் எதிலும் மிகவும் கண்டிப்புடன் செயல்படுவேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கோர்காலாந்து தனி மாநில போராட்டத்தை 72 மணி நேரத்திற்குள் வாபஸ் பெற வேண்டும்.

இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

பிரித்தாளும் சூழ்ச்சி: டார்ஜிலிங் மேற்கு வங்கத்தின் ஒரு பகுதி. டார்ஜிலிங் எனது இதயம்.ஒருபோதும் மேற்கு வங்கத்தில் இருந்து டார்ஜிலிங்கை பிரிக்க விடமாட்டேன்.

கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு நடத்திய போராட்டத்தால் டார்ஜிலிங் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலைநிறுத்த போராட்டம் சட்ட விரோதமானது.அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை முழு அடைப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றால் தலைமை செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளரை சந்தித்து பேச்சு நடத்தலாம்.

நான் ஏற்கெனவே டார்ஜிலிங் பகுதிக்கு 25 முறை சென்று வந்துள்ளேன்.மீண்டும் அங்கு செல்வேன்.

சில அரசியல் தலைவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடித்து வருகிறார்கள்.இது சரியான அணுகுமுறையல்ல.நாம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.ஒற்றுமை பற்றி சிந்திக்க வேண்டும்.

சில மத்திய விசாரணை அமைப்புகள் மாநில அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தலையிடுகின்றன. அவை சட்டம் ஒழுங்கை பராமரிக்க தடையாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர் பதிலடி: மம்தா பானர்ஜியின் 72 மணி நேர கெடு பற்றி கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு தலைவர் பிமல் கரங் டார்ஜிலிங்கில் செய்தியாளர்களிடம் கூறியது:

மம்தா பானர்ஜியின் மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் பயப்படமாட்டோம். அவர் தனது 72 மணி நேர கெடுவை வாபஸ் பெறாவிட்டால் டார்ஜிலிங் மக்கள் வீட்டுக்குள் இருந்தபடியே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.இதை அவரால் தடுக்க முடியுமா? என்று பதில் அளித்தார்.

TAGS: