எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பலமுறை சுட்டது. சுமார் 7 மணி நேரம் இந்தத் தாக்குதல் நடந்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் திருப்பிச் சுட்டது.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் பலியாயினர். அந்த பதற்றம் தணிவதற்குள் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.என். ஆச்சார்யா, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் உள்ள நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 10.20 மணிக்குத் தொடங்கிய இந்த தாக்குதல் சனிக்கிழமை அதிகாலை வரை, அதாவது சுமார் 7 மணி நேரம் நடந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் 7,000 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டும், பீரங்கி குண்டுகளை வெடித்தும், ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தானின் சமீபத்திய அத்துமீறல்களில் இதுவே மிகப் பெரியதாகும்.
இந்தத் தாக்குதல்களால் இந்திய வீரர்களுக்கு உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. எனினும், எல்லையில் கடும் பதற்றம் நிலவிவருகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் துப்பாக்கியால் சுடும் சப்தமும், பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சப்தமும் பூஞ்ச் நகரம் வரை கேட்டது என்றும் இதனால் உள்ளூர் மக்கள் கடும் பீதியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 6-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் 450 மீட்டர் ஊடுருவி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 5 பேர் பலியாயினர்.
இதையடுத்து இந்திய, பாகிஸ்தான் உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டது.
இந்தியாவின் பொறுமையை பலவீனமாகக் கருதக் கூடாது என்றும், பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
ஏற்கெனவே கடந்த ஜனவரி 8-ம் தேதி பூஞ்ச் பகுதியில் இந்திய வீரரின் தலையைத் துண்டித்தும், மற்றொரு வீரரின் உடலை சிதைத்தும் பாகிஸ்தான் வீரர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நியூயார்க்கில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா. சபை கூட்டத்தின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பேச்சுவார்த்தையைத் தொடர திட்டமிடப்பட்டது.
ஆனால், இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தான் பிரதமருடன் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால் இரு நாட்டுப் பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.