காங்கிரஸூக்கு எதிராக ஓரணியில் திரள்வோம்

modiகாங்கிரஸூக்கு எதிராக இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று குஜராத் முதல்வரும், பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவருமான நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பரம்பரை ஆட்சிக்கு நாம் முடிவுகட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று கூறினார்.

கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வந்த நரேந்திர மோடி, இங்குள்ள லால்பகதூர் மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சைக் கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் முறைப்படி மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைத்து நரேந்திர மோடி பேசியதாவது:

மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஊழல் நிறைந்ததாகிவிட்டது. வாக்கு வங்கி நடத்தி வரும் அக்கட்சியால் நாட்டுக்கு பாதுகாப்பை வழங்க இயலாது.

இந்திய ராணுவ வீரர்கள் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டபோது, பாகிஸ்தானை இதற்குப் பொறுப்பாக்குவோம் என்று பிரதமர் கூறினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் நமது எல்லைக்குள் வந்து 5 வீரர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் இப்படி தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறும்போது, 125 கோடி மக்களைக் கொண்ட இந்தியா அதை மௌனமாக சகித்துக் கொள்வதை ஏற்க முடியாது. நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வீரர்களை கொல்பவர்களுடன் நாம் எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும் அல்லது பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

பரம்பரை ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் மத்தியில் காங்கிரஸ் அரசை அகற்றவும், பரம்பரை ஆட்சிக்கு முடிவு கட்டவும் காங்கிரஸ் அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும். நாட்டுக்குப் பெரிய சுமையாக காங்கிரஸ் விளங்குகிறது.

நான் இங்கு வந்துள்ள நேரத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவை நினைவுகூர விரும்புகிறேன். அவர் ஆந்திர மக்களுக்கு மட்டுமல்ல; நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டார். அரசியலில் காங்கிரஸýக்கு எதிராக அலையை ஏற்படுத்தியவர் அவர். அவரது பெரு முயற்சியால்தான் முன்பு மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசு ஏற்பட்டது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை ஏற்படுத்துவதன் மூலம் நாம் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய தெலுங்கு தேசம் உள்ளிட்ட இதர அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்.

ராமாராவின் வாரிசுகள் என்று உரிமை கோரும் அனைவரின் (தெலுங்கு தேசம் கட்சியினர்) முதல் கடமையும் காங்கிரஸ் அல்லாத அரசைக் கொண்டுவருவதே ஆகும். இதற்காக அனைத்து முயற்சியும் எடுப்பது அவர்களின் கடமை. காங்கிரஸ் அரசை அகற்ற ஆந்திர அரசியல் கட்சிகள் அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் என்று நம்புகிறேன். என்.டி.ராமா ராவின் கனவை நனவாக்குவது தெலுங்கு தேசம் கட்சியின் கடமையாகும்.

காங்கிரஸ் ஊழல் செய்யாத இடமே இல்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசு எந்தப் பிரச்னையிலும் அக்கறை கொண்டிருக்கவில்லை. அது நாட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை.

நாட்டிலுள்ள ஏழை மக்களும் இளைஞர்களும் காங்கிரஸிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளனர். நீங்கள் இந்தியாவைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். நான் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறேன். காங்கிரஸின் பிடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார் நரேந்திர மோடி.

TAGS: