இன்று நாடு முழுவதும், பரபரப்பாகப் பேசப்படும் பெயர், துர்கா சக்தி நாக்பால். 28 வயதே நிரம்பிய, இந்த இளம் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் துணிச்சலும், போராட்ட குணமும், அவரை, நாட்டின் மிகப் பெரிய வி.ஐ.பி.,யாக்கி உள்ளது.
உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், துணை கலெக்டராக பணியாற்றிய துர்கா, அங்கு, அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி அரசு பதவியேற்றபோது, சந்தோஷப்பட்டார்.
காரணம், அகிலேஷ் யாதவ், இளைஞர்; படித்தவர் என்பதால்.”ஊழல் பேர்வழிகள், வன்முறையாளர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுப்பதற்கு, அகிலேஷ், உறுதுணையாக இருப்பார்’ என, நினைத்தார், துர்கா.
இதனால், கிரேட்டர் நொய்டாவில், திருட்டுத் தனமாக மணல் அள்ளிய மாபியா கும்பலை, விரட்டி, விரட்டி வேட்டையாடினார். சில மாதங்களிலேயே, மணல் திருடிய, 300 லாரிகளை பிடித்தார்.
17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.”யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்களை அசைக்க முடியாது’ என்ற திமிருடன் வலம் வந்த, மணல் மாபியாக்களை கைது செய்து, “மாமியார் வீட்டுக்கு’ அனுப்பி வைத்தார்.
ஆனால், இந்த மணல் மாபியாக்கள், ஆளும் கட்சியினடருடன், மறைமுகமாக நட்பு வைத்துள்ளவர்கள் என்பதும், அதிகாரங்களில் இருப்பவர்களுக்கு, மாதம் தோறும், கமிஷன் படி அளப்பவர்கள் என்பதும், துர்காவுக்குத் தெரியாமல் போய் விட்டது.
இதனால், உ.பி., அரசு, அவரை அதிரடியாக, “சஸ்பெண்ட்’ செய்தது. “விதிமுறைகளைப் பின்பற்றாமல், வழிபாட்டுத் தலத்தை இடித்ததால் தான், அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்’ என, நொண்டிச் சாக்குக் கூறியது, உ.பி., மாநில அரசு.
ஆனால், நேர்மையான அதிகாரிகளும், பத்திரிகைகளும், துர்கா என்ற நேர்மையான அதிகாரி, பழிவாங்கப்பட்டதன் பின்னணியை, நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தினர். இதனால், மத்திய அரசே, இந்த விஷயத்தில், நேரடியாகத் தலையிடும் அளவுக்கு, பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
துர்கா, அதிரடியான அதிகாரியாக இருக்கலாம்; ஆனால், அமைதியான குணம் உடையவர். இவரின் தாத்தா, போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது, வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இதனால், இளம் வயதிலேயே, தானும் ஒரு நேர்மையான அதிகாரியாக வேண்டும் என்றும், எந்தவித அச்சுறுத்தலுக்கும் அடிபணியக் கூடாது என்றும், உறுதி எடுத்தார், துர்கா.இவரின் துணிச்சலான செயலைப் பார்த்து, பல மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் பணியாற்றும்படி அழைப்பு விடுத்து உள்ளனர்.
துர்காவுக்குக் கிடைத்துள்ள ஆதரவைப் பார்த்து, சமாஜ்வாதி கட்சியினர் கடும் ஆத்திரம் அடைந்து உள்ளனர். “அதிகாரி துர்காவை, மீடியாக்கள், கடவுள் துர்கா போல் சித்தரிக்கின்றனர்’ என, அவர்கள் விமர்சிக்கின்றனர்.
ஆனால், நேர்மையான அதிகாரிகளும், உ.பி., மாநில மக்களும், மணல் மாபியாக்களை அழிப்பதற்காக உருவெடுத்துள்ள, கடவுளாகவே, துர்காவைப் பார்க்கின்றனர்.
antha arasaanggam namma barisan nasional polanu eduttukkovome