அடம் பிடிக்கும் இலங்கையால் பாதிப்பு : பிழைப்பு தேடி கேரளா செல்லும் மீனவர்கள்

Tamil_News_large_778869ராமேஸ்வரம்:இலங்கை சிறையில், 56 நாட்களாக வாடும் மீனவர்களை விடுவிக்காமல், அந்நாட்டு அரசு பிடிவாதமாக இருக்கிறது. பயத்தில் மீன் பிடிக்க செல்வதற்கு படகு உரிமையாளர்கள் பலர் முன்வராததால், வேலையின்றி தவிக்கும் தமிழக மீனவர்கள், கேரளாவுக்கு செல்கின்றனர்.

மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை கடல் பகுதியில், தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள், பாரம்பரியமாக மீன் பிடிக்கின்றனர். சில மாதங்களாக, மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது, வலைகளை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.

மேலும், சில வாரங்களுக்கு முன், இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள், 56 நாள்களுக்கும் மேலாக, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு நட்பு பாராட்டினாலும், இலங்கை அரசோ நாளுக்கு, நாள் அத்துமீறி வருகிறது. இதற்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை.

இலங்கையின் சர்வாதிகார போக்கு தலைதூக்குகிறது. பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள் தான். இலங்கை கடற்படையின் தாக்குதல் பீதியால் பல படகு உரிமையாளர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் வருமானமின்றி தவிக்கும் மீன்பிடி தொழிலாளர்கள், வேலைதேடி வெளியூர் செல்ல துவங்கி உள்ளனர்.

மீனவர்களை விடுவிக்க கோரி, நேற்று முதல் ராமேஸ்வரத்தில், மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐஸ் கம்பெனி, லேத் பட்டறை, ஒட்டல்கள் மூடப்பட்டு, மீனவர்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடி காணப்படுகிறது.

இலங்கை கடற்படையின் அடாவடியால் வேலை, வருமானம் இன்றி, அன்றாட குடும்ப செலவிற்கு, பணமின்றி ராமேஸ்வரம் மீனவர்கள் தவிக்கின்றனர். இதனால், 2,000 மீனவர்கள் வேலை தேடி, கன்னியாகுமரி, கேரளா சென்று விட்டனர்.

இதுகுறித்து, மீனவர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வருமானம் இன்றி தவிக்கும் ஏழை மீனவர்கள், வெளியூருக்கு செல்வதை தடுக்க முடியாது. அதிகாரிகள் முன்னிலையில் இந்திய, இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தினால் தான், தீர்வு ஏற்படும், என்றார்.

TAGS: