பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம்: ஏ.கே.அந்தோனி

ANTONY1எல்லையில்  பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, கொச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஏ.கே.அந்தோனியிடம் எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், அவ்வப்போது ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப, எதிர்த் தரப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பாதுகாப்பு படையினருக்கு சுதந்திரம் உள்ளது என்று தெரிவித்தார்.

சமீபத்தில் இந்திய வீரர்கள் 5 பேர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில், தங்களது நிலையை ஒரே நாளில் மாற்றிக் கொண்டது ஏன் என்ற கேள்விக்கு, தற்போது நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்விக்கு நாடாளுமன்றத்துக்கு வெளியே பதில் அளிக்க முடியாது என்று கூறினார்.

எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் அந்தோனி, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போல் உடையணிந்து வந்த பயங்கரவாதிகள்தான் தாக்குதல் நடத்தினர் என்று கூறினார்.

அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து மறுநாளே தனது நிலையை மாற்றிக் கொண்டு, பாகிஸ்தான் ராணுவம் மீது அந்தோனி குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அடிக்கடி மீறுவது பற்றியும், எல்லைப் பகுதியில் அத்துமீறல்கள் நடப்பது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

மேலும் அவர் கூறுகையில், நீர் மூழ்கி கப்பல்களை அதிகளவில் தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

TAGS: