மணிப்பூர் மாநிலத்தை 3 ஆக பிரிக்கக் கோரி தொடர் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மணிப்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் நாகா பிரிவினர் தனி மாநிலம் கோரி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதன்காரணமாக அங்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
சேனாபடி, உக்ருல், சண்டல், டமங்லாங் மாவட்டங்களில் உள்ள மார்க்கெட், கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இம்பாலில் இருந்து சூரசந்பூர் நகருக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன.மற்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் ரத்து செய்யப்பட்டன.
ஒருங்கிணைந்த நாகா அமைப்பினர் கூறும்போது,எங்களுடன் தனி மாநிலம் பற்றி மத்திய அரசு பேச்சு நடத்தாவிட்டால் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிப்போம்.
எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் மத்திய அரசின் திட்டங்களை நாகா பகுதியில் செயல்படுத்த விட மாட்டோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் மணிப்பூரில் குகி பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியை குகிலேண்ட் என்று பிரிக்க கோரி குகி மாநில குழு கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்டு 13 ஆம் தேதி நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தை 3 ஆக பிரிக்கும் கோரிக்கை வலுத்துள்ளதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.