அமைதிப் பேச்சு: பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா

India_talksபாகிஸ்தானிடமிருந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்திருந்தாலும், வன்முறையும் பயங்கரவாதமும் இல்லாத சூழலில் மட்டுமே பேச்சுவார்த்தையைத் தொடரமுடியும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எல்லையில் 5 வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா பாகிஸ்தானிடையே அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தையை பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: இந்தியாவுடன் அமைதி, நல்லுறவு, ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புவதாக கூறிய பாகிஸ்தானின் புதிய பிரதமர், அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

2008-ம் ஆண்டில் மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்ட ஹஃபிஸ் சயீதை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

பாகிஸ்தானிடமிருந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்துள்ளது. இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வன்முறையும், பயங்கரவாதமும் இல்லாத சூழல் அமையவேண்டும். கடந்த வாரம் நடைபெற்ற வீரர்கள் படுகொலை, அந்த சூழலுக்கு எதிராக அமைந்துள்ளது.

பாகிஸ்தானின் அழைப்பில் பேச்சுவார்த்தைக்கான கால நிர்ணயம் எதுவுமில்லை. எனவே உரிய நேரத்தில் நாங்களே அவர்களைத் தொடர்பு கொள்வோம் என்றார்.

TAGS: