பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடியது திருமலை

temple1ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வராததால் செவ்வாய்க்கிழமை திருமலை வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருமலை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பஸ்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. கடந்த 38 வருடங்களாக ஆந்திர போக்குவரத்துத் துறை திருமலைக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது.

திங்கள்கிழமை நள்ளிரவு முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஜீப்களிலும் தனியார் வாகனங்களிலும் திருமலைக்கு வந்தனர்.

திருமலை ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வழங்கும் இடம், அறைகள் வழங்கும் இடம், விஜயா வங்கி மற்றும் கோயிலுக்குள் பணிபுரியும் ஊழியர்கள் திருமலைக்கு பயணிக்க உதவியாக தேவஸ்தானம் இலவச பேருந்துகளை இயக்கியது.

அரசுப் பேருந்துகள் ஓடாததை காரணமாக வைத்து, தனியார் வாகன ஓட்டிகள் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது; மீறி வசூலித்தால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான கண்காணிப்புத் துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், திருமலைக்கு பஸ்கள் புதன்கிழமை முதல் இயக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. போக்குவரத்து ஊழியர்களுடன் சித்தூர் மாவட்ட ஆட்சியரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல் அதிகாரியும் பேச்சு நடத்தினர். இதை தொடர்ந்து, அடிவாரத்திலிருந்து திருமலைக்கு பஸ்களை இயக்க அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஏழுமலையானை தரிசித்தவர்கள்: திருமலையில் ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை குறைந்த அளவு பக்தர்களே தரிசித்தனர். தர்ம தரிசனத்திற்கு 4 மணி நேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்திற்கு 2 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 1 மணி நேரம் ஆனது.

TAGS: