மும்பை : இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பான கப்பல் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நீர்மூழ்கி கப்பலுக்குள் இருந்த 3 அதிகாரிகள் உள்ளிட்ட 18 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் என்ற அந்த நீர்மூழ்கி கப்பலில் பயங்கர வெடி சத்தத்துடன் தீப்பற்றி எரிய துவங்கி உள்ளது. கப்பலில் இருந்த நிறைய கடற்படை வீரர்கள் பாதுகாப்பிற்காக கடலில் குதித்துள்ளனர். அவர்களில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் சிலர் கப்பலுக்குள் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் சிலர் கப்பலுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாக அதிகாலை 3.15 மணியளவிலேயே பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இதுவரை யாரும் உயிரிழந்ததாக தகவல்கள் இல்லை எனவும் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கள் குறித்த தகவல்கள் ஏதும் பெறப்படவில்லை. எனினும் காயங்களுடன் மீட்கப்பட்ட சில வீரர்கள், கொலபாவில் உள்ள ஐ.என்.ஹச்.எஸ்., அஸ்வினி கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் நீர்மூழ்கி கப்பலின் பெரும்பகுதி சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதில் இருந்த கடற்படைக்கு சொந்தமான பொருட்களும் சேதமடைந்திருக்கலாம் எனவும், அது குறித்த முழு தகவலும் பெறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சுமார் 16 தீயணைப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் மும்பை துறைமுக குழுவினர் கடும் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த பயங்கர தீ விபத்து காரணமாக தெற்கு மும்பையின் பெரும்பாலான பகுதிகள் புகைமூட்டத்துடன் காணப்பட்டது.
கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திடீரென பயங்கர வெடி சத்தத்துடன் தீ பற்றி எரிய துவங்கியதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.