முல்லை பெரியாறு அணையை இடிக்க உத்தரவிட முடியாது

mullaperiyar-dam-photoமுல்லைப் பெரியாறு அணையை இடிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு கருத்துத் தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தத்து, சந்திரமௌலி குமார் பிரசாத், மதன் பி. லோகுர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, “முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 1886-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்த போது சமஸ்தானங்கள் உள்ளிட்டவற்றுடன் ஆங்கிலேயர் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் காலாவதியாகி விட்டன’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.எம். லோதா “நூற்றாண்டு கால ஒப்பந்தம் காலவாதியாகி விட்டது என்றால் 1947-இல் மேற்கொள்ளப்பட்ட அணை தொடர்பான ஒப்பந்தம் மீது கேரளத்தின் நிலை’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஹரீஷ் சால்வே “அந்த ஒப்பந்தமும் காலாவதியாகி விட்டது’ என்றார்.

இதைத் தொடர்ந்து ஹரீஷ் சால்வே முன்வைத்த வாதம்:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்ததும் பழைய ஒப்பந்தத்தின்படி அணைக்கு தமிழகம் உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை எதிர்க்க கேரளத்துக்கு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில்தான் மக்கள் நலன் கருதி சட்டப்பூர்வமாக அணை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் அதை இடிக்க வேண்டும் என்பது கேரளத்தின் நிலைப்பாடு’ என்று ஹரீஷ் சால்வே வாதிட்டார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள் “இப்போது பிரச்னை அணை பலவீனமாக இருப்பது அல்ல. அது தொடர்பான வழக்கை நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து 2006-இல் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அதிகாரமளிக்கப்பட்ட குழுவும் அறிக்கை அளித்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி கேரளம் செயல்பட்டதற்கான காரணங்களைத்தான் நாங்கள் விசாரிக்கிறோம்’ என்றனர்.

இதையடுத்து, ஹரீஷ் சால்வே “அதை விவரிக்கும் ஆவணங்களை ஏற்கெனவே கேரள அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்’ என்றார். அத்துடன் தனது வாதத்தை முடித்துக் கொள்வதாகவும் ஹரீஷ் சால்வே குறிப்பிட்டார். இதையடுத்து, முல்லைப் பெரியாறு வழக்கில் தமிழக அரசின் வாதத்தை முன்வைக்க அனுமதித்து விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

TAGS: