இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை: சிறப்பு தூதர் தேவையில்லை

India_talksஇந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளைத் தீர்க்க சிறப்பு தூதர் தேவையில்லை என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பலமுறை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வன்முறைச் சூழலில் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தமாட்டோம் என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியைப் பேண சிறப்பு தூதரை நியமித்ததுபோல், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க சிறப்பு தூதர் நியமிக்கப்படுவாரா என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃபிடம் செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர் கூறியது: இரு நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து வருந்துகிறோம்.

பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்; அதற்காக சிறப்பு தூதர் தேவையில்லை. இரு நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதர்களின் மூலம், இந்தப் பேச்சு வார்த்தை தொடர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இது குறித்து இரு நாட்டு அரசுகளிடமும் தெரிவித்துள்ளோம்.

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கையில் எவ்வித மாறுபாடும் இல்லை. அதுகுறித்து இரு நாடுகள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

TAGS: