நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி குறித்து விவாதிக்கத் தயாரா என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து புஜ்ஜில் உள்ள கல்லூரியின் சுதந்திர தினவிழாவில் மோடி பேசியது:
சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியா மீது தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் துணிச்சலான நடவடிக்கையை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தயக்கம் காட்டி வருவதால் அவர் வலிமையற்றவர் என்பது நிரூபணமாகி வருகிறது.
“பொறுமைக்கும் எல்லை உண்டு’ என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சுதந்திர தின விழா உரையில் கூறியிருக்கிறார். எது எல்லை, அது எங்கே இருக்கிறது? எதுவரை பொறுமை காப்பது என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
இப்போதைய சூழ்நிலையில் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. எல்லைக்கோட்டை கடந்து இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருகிறது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொல்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில்?
பக்கத்து நாடுகளோடு நல்லுறவு அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுகிறார். இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் தாக்குவது ஏன் என்பதற்கான காரணத்தை அவர் விளக்க வேண்டும். இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக, பிரதமர் உரையில் தெளிவான விளக்கம் இல்லை. ராணுவத்தை பலப்படுத்த வேண்டும்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பாகிஸ்தான் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு குடியரசுத் தலைவர் தனது உரையில், “பொறுமைக்கும் எல்லை உண்டு’ என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். பாகிஸ்தானைக் கண்டிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் விரைவாக கையாள வேண்டும்.
பிரதமருக்கு சவால்: நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி குறித்து என்னுடன் விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தயாரா?
தில்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் ஆற்றிய உரையும், நாட்டின் முதல் பிரதமராக ஜவாஹர்லால் நேரு தனது முதல் உரையில் குறிப்பிட்டதைப் போன்ற உள்ளது. அப்படியெனில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் நாட்டுக்காக என்ன செய்திருக்கிறது?.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பொருளாதாரக் கொள்கையையே பிரதமர் மன்மோகன் சிங்கும் பின்பற்றி வருகிறார். ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைவதற்கு யார் காரணம்? இதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். ரூபாயின் மதிப்பு அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்களா? இதையெல்லாம் செய்யாமல் வலிமையான இந்தியா எப்படி உருவாகும்?
குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில், ஊழலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்க்கும்போது, தில்லி செங்கோட்டையில் பிரதமர் ஆற்றிய உரையைக் காட்டிலும் குடியரசுத் தலைவரின் உரை நன்றாக உள்ளது. குடியரசுத் தலைவர் குறிப்பிட்டதைப் போல, ஊழல் குறித்து உடனடியாக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கும், ஊழல் செய்பவர்களுக்கும் எதிரான போராட்டத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது. இதற்கான விளக்கத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை அரசியல் கண்ணோட்டத்தில் நான் கூறவில்லை. இருப்பினும், நாட்டுக்காக இதை நான் எதிர்பார்க்கிறேன்.
நாட்டில் ஊழல் முற்றிலுமாக அகற்றப்பட்ட வேண்டும். ஊழல் செய்யும் குடும்பங்களை நாட்டிலிருந்து விலக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பிரச்னைகளைக் கூட எழுப்ப முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. மக்களவை செயல்படாமல் முடங்கியுள்ளது” என்றார்.