இந்திய தளத்தை அமெரிக்க உளவு விமானங்கள் பயன்படுத்த நேரு அனுமதித்தார்

jawaharlal-nehru-1அமெரிக்க உளவு அமைப்பின் விமானங்கள் இந்தியாவில் உள்ள விமானப்படைத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்னாள் பிரதமர் நேரு அனுமதி அளித்தது இப்போது கிடைத்துள்ள ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பிடம் இருந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆவணக் காப்பகம் சமீபத்தில் 400 பக்க ஆவணங்களைப் பெற்றது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த 1962ஆம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரில் இந்தியா தோற்றது. அதே ஆண்டில் நவம்பர் 11ஆம் தேதி சீனாவுடனான எல்லைப் பகுதிகளை வேவு பார்ப்பதற்காக அமெரிக்க விமானங்கள் அங்கு பறப்பதற்கு அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு ஒப்புதல் அளித்தார்.

மேலும், இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட ஒடிசாவில் உள்ள சார்பாட்டியா விமானப்படைத் தளத்தை எரிபொருள் நிரப்புவதற்காக சி.ஐ.ஏ. விமானங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் நேரு அனுமதி அளித்தார்.

அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கும், அமெரிக்க அதிபர் ஜான் கென்னடிக்கும் இடையே 1963ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது சார்பாட்டியா தளத்தைப் பயன்படுத்துவது குறித்து உடன்பாடு ஏற்பட்டது.

எனினும் அந்தத் தளத்தை மேம்படுத்திக் கொடுக்க இந்தியா நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து, அமெரிக்க உளவு விமானங்கள் தாய்லாந்தில் உள்ள தாக்லி படைத் தளத்தைப் பயன்படுத்திக் கொண்டன.

1963ஆம் ஆண்டு அமெரிக்காவின் யூ-2 உளவு விமானங்கள் சுமார் 12 மணிநேரம் பறந்ததுதான் சி.ஐ.ஏ.வின் நீண்ட உளவுப் பயணமாகும். அதிக நேரம் பறந்ததால், அந்த விமானத்தின் பைலட் மிகவும் களைப்படைந்தார். அதன் பின், உளவு விமானங்களின் அதிகபட்ச பயண நேரம் 10 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது.

அதன் பின், 1964இல் சார்பாட்டியா விமானப் படைத் தளத்தை அமெரிக்கா முதல் முறையாகப் பயன்படுத்தியது. எனினும், நேருவின் மறைவைத் தொடர்ந்து, அடுத்தகட்ட உளவு விமானச் செயல்பாடுகள் ஒத்திப் போடப்பட்டன. அங்கிருந்து உளவு விமானங்களை அமெரிக்க பைலட்டுகள் ஓட்டிச் சென்றனர்.

எனினும் 1964 டிசம்பர் மாதம் இந்தியா-சீனா இடையே பதற்றம் அதிகரித்தது. அப்போது அமெரிக்க உளவு விமானங்கள் மீண்டும் சார்பாட்டியாவுக்கு வந்தன. அவை இந்திய-சீன எல்லைப்பகுதியில் சீனப் படைகளின் நடமாட்டத்தை வெற்றிகரமாக வேவு பார்த்து இந்திய அரசுக்குத் தெரிவித்தன.

அந்தக் காலகட்டத்தில் தாய்லாந்தின் தாக்லி படைத்தளம்தான் சி.ஐ.ஏ.வின் ஆசியப் பகுதி உளவுச் செயல்பாடுகளுக்கு முக்கிய தளமாக இருந்தது. சார்பாட்டியா படைத்தளம் 1967ஆம் ஆண்டு ஜூலையில் மூடப்பட்டு விட்டது.

சி.ஐ.ஏ. வழங்கியுள்ள ஆவணங்களின்படி, 1962இல் சீன ராணுவம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மேற்குப் பகுதியிலும், வடகிழக்குப் பகுதியிலும் எல்லை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தியது.

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கிற்கு வடக்கே இந்தியா அமைத்திருந்த அனைத்து அரண்களையும் சீன ராணுவம் சிதைத்தது. அப்போது, ராணுவ உதவி வழங்குமாறு இந்தியா, அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் அமெரிக்கா விமானம் மூலம் உளவு பார்ப்பதன் மூலம் சீன ஊடுருவல் குறித்து தெளிவாகத் தெரிய வரும் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக இருந்த ஜான் கென்னத் கால்பிரைத் தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் நேரு, அமெரிக்காவின் யூ-2 உளவு விமானங்கள் இந்திய விமானப் படைத் தளங்களில் எரிபொருள் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கினார்.

அதன்படி சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகள் மீது பறந்து ரகசியமாகப் புகைப்படம் எடுத்து இந்தியாவிடம் வழங்கும் பணியில் அவை ஈடுபட்டன என்று சிஐஏ சமீபத்தில் அளித்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

TAGS: