மும்பை, ஹைதராபாத், தில்லி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் (எ) துண்டா (70) கைது செய்யப்பட்டார்.
நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியும், தேடப்படும் முதல் 20 பயங்கரவாதிகள் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளவருமான துண்டாவை இந்திய-நேபாள எல்லையில் பன்வாஸா-மெகந்தர் நகர் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்ததாக போலீஸார் கூறினர்.
இது குறித்து, தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவின் சிறப்பு ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் மூலம், இந்தியாவில் பல பயங்கரவாதச் செயல்கள் நடைபெற முக்கியக் காரணமாக இருந்தவர் அப்துல் கரீம் (எ) துண்டா. கைது செய்யப்பட்டு தில்லிக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் அப்துல் குதூஸ் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் இருந்தது தெரியவந்துள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1993-ல் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, 1996-98-ஆம் ஆண்டுகளில் தில்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, பானிபட், சோனிபட், லூதியாணா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் அவர் தேடப்பட்டு வந்தார்.
1993 டிசம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் லக்னெü, சூரத், குல்பர்கா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ரயில்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளிலும் அவரை போலீஸார் தேடி வந்தனர்.
லஷ்கர் இ தொய்பா அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், துண்டாவின் உத்தரவுப்படி, தில்லியில் 24 இடங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் 3, ஹரியாணாவில் 5 இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.
பயங்கரவாதியானது எப்படி?: துண்டா 1980-களின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பால் பயங்கரவாதியானார். 1985-ல் தொழில் காரணமாக அப்துல் கரீம் (எ) துண்டா மும்பை சென்ற போது அங்குள்ள பிவாண்டி என்ற இடத்தில் மதக் கலவரம் ஏற்பட்டது. அதன்பிறகு மும்பையில் இருந்த டாக்டர் ஜலீஸ் அன்சாரியுடன் துண்டாவுக்கு நட்பு ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து “தன்ஸீம் இஸ்லா-உல்-முஸ்லிமின்’ என்ற அமைப்பை உருவாக்கினார். முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கான ராணுவம் என்பது அந்த அமைப்புப் பெயரின் பொருளாகும்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பழிவாங்க நினைத்த துண்டா, அன்சாரி ஆகிய இருவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆசம் கோரியை தங்கள் அமைப்பில் சேர்த்துக் கொண்டனர். அதன் பிறகு 1993-ல் மும்பை, ஹைதராபாத் நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தை முன்னின்று நிகழ்த்தினர். அது தொடர்பான வழக்கில் 1994-ல் டாக்டர் ஜலீஸ் அன்சாரி கைது செய்யப்பட்டார். ஆனால், அப்போது துண்டா, வங்க தேசத் தலைநகர் டாக்காவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்றார் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா.
ஆகஸ்ட் 15-ல் தில்லியில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்க லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும், அதனால் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் இந்திய உளவுத் துறை கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
சுதந்திர தின விழா முடிவடைந்த நிலையில், துண்டாவை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த துண்டா? தில்லி, தர்யாகஞ்ச் பகுதியில், டிலைட் திரையரங்கம் அருகில் உள்ள சட்டா லால் மியா என்ற இடத்தில் 1943-ல் பிறந்தவர் அப்துல் கரீம் (எ) துண்டா. 40 வயது வரை தச்சு வேலை, பழைய பொருள்கள் வாங்கி, விற்பது, ஜவுளி வியாபாரம் ஆகியவற்றில் துண்டா ஈடுபட்டு வந்தார்.
லஷ்கர் இ தொய்பா அமைப்பில் சேரும் இளைஞர்களுக்குக் குண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வந்துள்ளார்.
உள்ளூரில் கிடைக்கும் யூரியா, சர்க்கரை, நைட்ரிக் ஆசிட், பொட்டாசியம் குளோரைடு, நைட்ரோ பென்ஸீன் உள்ளிட்டவற்றைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயற்சி அளித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்த போது முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வெடிகுண்டு தயாரிப்புப் பயிற்சி அளித்துள்ளார்.
தாவூத் இப்ராஹிம் நெருங்கிய கூட்டாளி
1996 முதல் 1998-ஆம் ஆண்டு வரை தில்லியில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் துண்டாவுக்கு முக்கியத் தொடர்பு இருந்தது. ஒரு கட்டத்தில், அவர் வங்கதேசத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இறந்திருக்கலாம் என்று போலீஸார் கருதினர்.
ஆனால், 2005-ஆம் ஆண்டு துபையில் லஷ்கர் இ தொய்பா தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லப்படும் அப்துல் ரஸாக் மஸþத் தில்லி சிறப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். துண்டா உயிருடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு, தேடப்படும் குற்றவாளியாக துண்டா அறிவிக்கப்பட்டார்.
2008 நவம்பர் 26-ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு துண்டா உள்ளிட்ட 20 பயங்கரவாதிகளை ஒப்படைக்கும்படி பாகிஸ்தானிடம் இந்தியா கோரி வந்தது. லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹஃபீஸ் முகமது சயீது, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மெüலானா மசூத் அஸார், மாஃபியா கும்பல் தலைவர் தாவூத் இப்ராஹிம் ஆகியோருடன் துண்டாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.
2010-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு சிறிது நாள்களுக்கு முன்னதாக தில்லியில் பல இடங்களில் குண்டு வெடிக்கச் செய்ய துண்டாவும் அவரது கூட்டாளிகளும் முயன்றனர். ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.