இந்தியாவில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
1991-ம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற ஏற்றுமதி – இறக்குமதியில் நிலையின்மை பிரச்னை மீண்டும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடர்பான புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, சமீபகாலமாக நடப்புக் கணக்கில் அதிக அளவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, அதிகரித்து வரும் பொருளாதாரச் சிக்கலால் பொதுவாக ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு, நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை நோக்கி செல்வதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியது: 1991-ம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை. அப்போது இந்தியாவின் அன்னியச் செலாவணி என்பது நிலையான விகிதத்தில் இருந்தது. இப்போது பங்குச் சந்தையுடன் இணைந்ததாக உள்ளது. இப்போது ரூபாய் மதிப்பின் ஏற்ற-இறக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்தி வருகிறோம்.
மேலும் 1991-ம் ஆண்டில் அன்னியச் செலாவணி இருப்பு என்பது 15 நாள்களுக்கு மட்டுமானதாக இருந்தது. ஆனால் இப்போது அன்னியச் செலாவணி இருப்பு 6 முதல் 7 மாதங்கள் வரை உள்ளது. எனவே அப்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட முடியாது.
அதே நேரத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது உண்மைதான். தங்கத்தின் இறக்குமதி பெருமளவில் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம். லாபம் ஈட்டாத சொத்துகளிலேயே நாம் அதிகம் முதலீடு செய்து வருகிறோம் என்றார் மன்மோகன் சிங்.
ஆர்பிஐ பணக் கொள்கை: ரிசர்வ் வங்கி கடைப்பிடிக்கும் பணக்கொள்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றும் பிரதமர் மன்மோகன் அழைப்பு விடுத்தார்.
உலகமயமாகிவிட்ட பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பவும், சர்வதேச பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்பவும் ஆர்பிஐ தனது பணக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். தேசிய அளவிலான பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க புதிய சிந்தனைகள் அவசியம். நாம் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
1982 முதல் 1985-ம் ஆண்டு வரை, தாம் ஆர்பிஐ கவர்னராக பதவி வகித்ததை நினைவூகூர்ந்து பேசிய மன்மோகன் சிங், “ஆர்பிஐ கவர்னராக நான் தேர்வு செய்யப்பட்டபோது பணக்கொள்கை குறித்து எனக்கு பெரிய அளவில் எதுவும் தெரியாது. அப்போது பொருளாதாரப் பேராசிரியர் சுகாமயி சக்கரவர்த்தி தலையிலான குழுவின் அறிக்கை எனக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆர்பிஐ பல்வேறு வகைகளில் உதவியுள்ளது. எனினும் அதன் சிறப்பான பங்களிப்பு வரும் காலத்தில்தான் அதிகம் தேவைப்படும்’ என்றார்.
ஆர்பிஐ கவர்னர் சுப்பாராவ், முன்னாள் கவர்னர்கள் அமிதாபா கோஷ், சி.ரங்கராஜன், பிமல் ஜலான், ஒய்.வி.ரெட்டி, மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் நமோ நாராயண் மீனா, ஜே.டி.சீலம் உள்ளிட்டோர் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல் குறித்துப் பேசிய ஆர்பிஐ கவர்னர் சுப்பாராவ், “வளர்ச்சியில் அரசு முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் உள்நாட்டில் பொருள்களின் விலையை நிலையாக வைத்துக் கொள்வதில் மத்திய வங்கி கவனம் செலுத்த வேண்டும். இதுவே பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மிக எளிதான வழி எனக் கூறுவது தவறு.
உள்நாட்டில் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, நிதிநிலையை ஸ்திரப்படுத்துதல், வளர்ச்சி ஆகியவையே ஆர்பிஐ-யின் பணக்கொள்கையின் நோக்கமாக உள்ளது. பணவீக்கத்தைக் கடுப்படுத்துவதில் மட்டுமல்லாது, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டும் ஆர்பிஐ செயல்படுகிறது’ என்றார்.