அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்த பேச்சு நடத்துவதே சிறந்த வழி: குர்ஷித்

salmen_kurshidஅண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்த வழி என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள டூன் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடர்பாக அவர் மேலும் பேசியது: போர் எதற்குமே தீர்வு ஆகாது. பேச்சு நடத்துவதன் மூலம் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்த முடியும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே அண்டை நாடுகளுடன் சுமுகமாக நடந்து கொள்ள தயாராகவே இருக்கிறோம்.

வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது மட்டுமல்லாது, பல்வேறு துறைகளில் வளர்ந்த நாடுகளுக்கும் இணையாக முன்னேறியுள்ளது. முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் கடைப்பிடித்த வெளியுறவுக் கொள்கைகள்தான் இதற்கு முக்கியக் காரணம். நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் அவர்கள் மிகச் சிறந்த தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர் என்றார்.

நான் கரப்பான் பூச்சியா? கரப்பான் பூச்சி என்று பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி தன்னை விமர்சித்தது குறித்துப் பேசிய சல்மான், “என்னைப் பார்த்தால் கரப்பான் பூச்சி போல தெரிகிறதா?’ என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை நோக்கி கேள்வி எழுப்பினர்.

முன்னதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, கிணற்றில் இருந்து வெளியே வந்துள்ள தவளை. இந்த பெரிய உலகில் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிகிறது என்று வர்ணித்திருந்தார்.

இதையடுத்து சல்மானை, கரப்பான் பூச்சி என்று பாஜக வர்ணித்துள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசினால் ஒருவர் சாகமாட்டார். அவர் சல்மான் குர்ஷித், எனெனில் அவர் ஒரு கரப்பான், அது மட்டுமே அணுகுண்டு வீச்சுக்கும் சாகாது என்று மீனாட்சி லேகி கூறியிருந்தார்.

TAGS: