கச்சத்தீவை ஒப்படைக்க முடியாது: இலங்கை அமைச்சர் பெரீஸ் திட்டவட்டம்

peirisகச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுகே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ்தெரிவித்தார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச சார்பில், பிரதமர் மன்மோகன் சிங்கை அழைப்பதற்காக பெரீஸ் ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தார். அவர் மன்மோகன் சிங்கை திங்கள்கிழமை காலையிலும் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிதை பிற்பகலிலும் சந்தித்துப் பேசவுள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பெரீஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

“காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய நாடு இந்தியா. அதன் பிரதமர் என்ற முறையில் கொழும்பில் நடைபெறும் கூட்டத்தில் மன்மோகன் சிங் பங்கேற்பதை முக்கியமானதாகக் கருதுகிறோம்.

கச்சத்தீவு விவகாரம்: கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக தமிழகக் கட்சிகள் பிரச்னை எழுப்புவது சரியல்ல. அது முடிந்து போன விவகாரம்.

கச்சத்தீவை இலங்கைவசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திதான் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, சர்வதேச எல்லைக்குள்பட்ட கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும், ஒப்பந்தத்தில் இலங்கை மீனவர்களுக்கும் இலங்கைக்கும் கச்சத்தீவில் உள்ள உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் இந்திய அரசின் நிலை தெளிவாக உள்ளது. எனவே, கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மீனவர்கள் பேச்சு நடத்த வேண்டும்: இலங்கை கடல் பகுதிக்கு வெகு அருகே, கரையில் இருந்து 700 மீட்டர் தொலைவு அளவுக்குத் தமிழக மீனவர்கள் வந்து மீன்பிடிக்கின்றனர். ஏற்கெனவே, இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது கடற்புலிகளால் (விடுதலைப்புலிகள் அமைப்பின் கடல் பிரிவு) இலங்கைத் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். போருக்குப் பின்பு அவர்கள் சார்ந்துள்ள கடல் பகுதிக்குத் தமிழக மீனவர்கள் வருவதால், தங்களின் மீன்பிடி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எங்கள் நாட்டு மீனவர்கள் கருதுகின்றனர்.

மனிதாபிமானம் தொடர்புடைய இரு நாட்டு மீனவர்கள் விஷயத்தில் இரு தரப்பும் தங்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பேச்சு நடத்தி தீர்வு காண முயல வேண்டும் என்றார் பெரீஸ்.

TAGS: