இந்தியாவில் 21 குண்டுவெடிப்புக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்று கருதப்படும் அப்துல் கரீம் என்கின்ற துன்டா தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரும் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது.
துன்டாவை கைது செய்திருப்பதன் மூலம், தாவூத் இப்ராகிம் பற்றியும், இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் திட்டம் குறித்தும் தெளிவான விவரங்கள் கிடைத்துவிடும் என்று காவல்துறையால் பெருமையாகப் பேசவும் படுகிறது. இது வெற்றியா, முக்கிய திருப்புமுனையா என்பதைக் கிடைக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
26/11 மும்பைத் தாக்குதலில் முக்கிய தொடர்புடைய நபர் துன்டா. அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் சிலர் பாகிஸ்தானில் இருப்பதாக இந்திய அரசு நம்புகிறது. அவர்களை இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் பாகிஸ்தானிடம் தரப்பட்டது. பாகிஸ்தானில் இருப்பதாகக் கருதப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் 15வது இடத்தில் அப்துல் கரீம் என்கிற துன்டா பெயர் இடம்பெற்றிருந்தது.
1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு முதலாகவே தேடப்பட்டு வரும் 70 வயது துன்டா, இப்போது இந்திய-நேபாள எல்லையில் தில்லி போலீஸாரால் பிடிக்கப்பட்டிருப்பது, ஒரு கிழ சிங்கத்தைப் பிடித்திருப்பதற்கு ஒப்பானது. துன்டா மூலம் எந்தவிதமான புதிய தகவலும் இந்திய போலீஸýக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
இந்திய நாணய மதிப்பு மிகப்பெரும் வீழ்ச்சியடைந்த நாளில், அந்தச் செய்தி பின்னுக்குத் தள்ளப்பட, துன்டா கைது செய்தி ஒரு ஊடகத்தீனியாக மட்டுமே இருக்க முடியும்.
1987-ஆம் ஆண்டு முதலாகவே துன்டா மீது தாவூத் இப்ராகிம் மிகப்பெரும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பது ஏற்கெனவே காவல்துறைக்குத் தெரிந்த உண்மை. துன்டா இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதத்துக்கு தயார்படுத்தினார் என்பதும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உறங்குநிலை தீவிரவாதிகளை (ஸ்லீப்பர் செல்) உருவாக்கிக்கொண்டிருந்தார் என்பதும் ஏற்கெனவே தெரிந்த பழைய தகவல். பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தாவூத் இப்ராகிம் மூலமாக நிதியைப் பெற்றுத்தந்த விவரங்கள் குறித்த தகவலும் புதியதல்ல. ஏற்கெனவே தெரிந்த உண்மைகளுக்கே இந்திய அரசால் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாதபோது, துன்டா பிடிபட்டதால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.
துன்டா தற்போது வெளியிட்டதாகக் கூறப்படும் “தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் ராணுவத்தின் ஐஎஸ்ஐ பாதுகாப்பில் இருக்கிறார்’ என்கின்ற பரபரப்புத் தகவலை வைத்துக்கொண்டு இந்திய அரசு என்ன செய்துவிட முடியும்? பின்லேடனைப் பாதுகாத்துவந்த பாகிஸ்தான் ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, அத்துமீறி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அங்கே போய் அவரை சுட்டுத் தள்ளியது அமெரிக்க ராணுவம். இந்தியா என்ன அமெரிக்காவா? அதுபோல பாகிஸ்தானில் நுழைந்து தாவூத் இப்ராகிமை பிடித்துக் கொண்டு வருவதற்கு.
70 வயதான தீவிரவாதியிடம் – எந்த ஒரு தீவிரவாதியிடமும் – காவல்துறையினர் சாதாரண குற்றவாளிகளிடம் நடத்தப்படும் முரட்டுத்தனமாக விசாரணைகளை நடத்தமாட்டார்கள். ரசாயன மருந்துகள் மூலம் பிதற்ற வைத்து உண்மை அறிந்தாலும், அவை நீதிமன்றத்தில் சாட்சியமாகாது. 70 வயதான முதியவர் ஒருவர், “உறுதியாகாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்’ என்று பொதுநல வழக்கு தொடுக்கவும் இந்திய மண்ணில் சாத்தியங்கள் உள்ளன.
இந்தியாவின் பல நகரங்களும் தீவிரவாதிகளால் குறி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்திருந்தும்கூட, இன்றுவரையிலும் நோபாளத்திலிருந்து இந்தியா வருவதற்கு கடவுச்சிட்டை தேவை இல்லை என்கிற நிலைமையை கடைப்பிடிக்கும் இந்திய அரசை என்னவென்பது? தில்லி அருகே பிறந்து வளர்ந்த அப்துல் கரீம் துன்டாவிடம் பாகிஸ்தான் கடவுச்சிட்டை இருக்கிறது. பாகிஸ்தான் கடவுச்சிட்டையுடன் அவர் நேபாளத்துக்கும் வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் பறந்து செல்வதில் எந்தத் தடையும் இல்லை. அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து செல்வதிலும்கூட அவருக்கு எந்தத் தடையும் ஏற்பட்டிருக்க முடியாது. இனிமேலாவது நேபாளத்துக்கு செல்லவும் அங்கிருந்து இந்தியா வருவதற்கும் கடவுச்சிட்டை கட்டாயமாக்கப்படுமா? சந்தேகம்தான்.
தீவிரவாத செயல்களுக்கும், உறங்குநிலை தீவிரவாதிகளுக்கும் தரப்படும் பெருந்தொகை இந்தியாவின் அரசுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலமாகத்தான் பட்டுவாடா ஆகின்றன. இவ்வாறு இந்தியாவுக்கு சட்டவிரோதமாக பணம் வருவதை அனுமதித்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பல நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இவை யாவும் தெரிந்திருந்தும்கூட இந்திய அரசும், இந்திய உளவுத் துறையும் அந்த கணக்குகளை முடக்கவோ அல்லது அந்தக் கணக்குகளுக்கு உரிய நபர்களை கைது செய்யவோ இதுவரை முனைப்பு காட்டவில்லையே, இனியாவது செய்வார்களா?
தற்போது துன்டா கைதாகியிருக்கிறார் என்பது ஒரு முழுமுதல் வெற்றி அல்ல. துன்டா இந்தியாவில் யாருக்கெல்லாம் மேம்பட்ட வெடி வகை (ஐ.இ.டி) தயாரிப்பு பயிற்சி அளித்துள்ளார், எத்தனை பேரை உறங்குநிலை தீவிரவாதிகளாக மாற்றியுள்ளார் என்ற பட்டியலை அவரிடமிருந்து பெறவும், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் நடந்தால் மட்டுமே, இந்தக் கைது மூலம் ஒரு திருப்புமுனை ஏற்பட்டதாகவும் இதை ஒரு வெற்றியாகவும் கருத முடியும்.
இந்த செய்தியில் வரும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் சொந்த மனதில் உதித்தது போன்று இருக்கிறது. தயவு செய்து ஊடகங்கள் செய்தியை மட்டும் வெளியிடுங்கள் மாறாக நீதிபதிகளாக செயல்பட வேண்டாம். ஒருநாள் இந்த முதியவர் குற்றமற்றவர் என்று தெரிந்தால் அதை வெளியிட எந்த ஊடகத்திற்கும் முதுகெலும்பு இருக்காது. செம்பருத்தியின் நடுநிலைமை அப்பொழுதுதான் தெரியும்?
அண்மையில் புத்த கயா குண்டு வெடிப்பு சம்பதமாக ஒரு ஹிந்து சாமியார் கைது செய்யபட்டார், அதை பத்தின தகவல் ஒன்றையும் காணோம், ooohh இதற்க்கு பெயர்தான் பத்திரிக்கை தர்மமோ. நேற்று கூட இந்திய நாட்டு ஆன்லைன் செய்திகளில் திருச்சி சாமியார் ஒருவர் 14 வயது சிறுமியை மனபாங்கம் செய்தி பரவலாக வந்தது .
ஆமாம் மகான் அவர்களே. நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் புத்தகயா குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக பொய் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இன்னும் விடுதலையாகவில்லை என்பது தான் மிகவும் வருத்தம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாகும்பொழுது விடுதலை அடைவார்கள். அப்பொழுது நீதிமன்றம் சொல்லும், இவர் குற்றமற்றவர் என்று. இது தான் இன்றைய இந்தியாவின் நிலைமை.