இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானின் கராச்சியில் அந்நாட்டு உளவுத் துறையான ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் இருப்பதாக லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா தெரிவித்தார்.
மும்பை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அப்துல் கரீம் துன்டாவை இந்திய-நேபாள எல்லையில் தில்லி போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்கள் குறித்து தில்லி காவல் துறை உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
“பாகிஸ்தானின் கராச்சியில் துன்டா இருந்த போது பல மதராஸாக்களை நடத்தியுள்ளார். அதன் மூலம் பெற்ற நன்கொடையைக் கொண்டுதான் பயங்கரவாதச் செயல்களுக்கு இளைஞர்களைச் சேர்த்து அவர்களுக்கு ஆயுதம், வெடிகுண்டுகளை இயக்கும் பயிற்சியை அளித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு வகுப்பு: துன்டா, இந்தியாவுக்கு எதிராகப் போரிடுவது தொடர்பாக பயங்கரவாதிகளுக்கு வகுப்பு நடத்தியுள்ளார்.
ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடனும் துன்டா நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார்.
மும்பை தாக்குதல் தாவூத் இப்ராஹிமுக்கு தெரியும்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு, துன்டாதான் அறிமுகப்படுத்தியுள்ளார். நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முன்பு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஹபீஸ் சயீத்தை துன்டா சந்தித்துப் பேசியுள்ளார்.
கராச்சியில் பாதுகாப்பான இடத்தில் தாவூத் இப்ராஹிம், ஐஎஸ்ஐ உளவுத் துறையின் பாதுகாப்போடு இருக்கிறார். லஷ்கர் கமாண்டராகவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகவும் செயல்பட்ட ஸாகி-அர்-ரஹ்மான் லக்வியுடன் துன்டாவுக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின்னர் அவை சரி செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்த தகவல் தாவூத் இப்ராஹிமுக்குத் தெரியும் என்று துன்டா கூறுகிறார்.
வாசனைத் திரவியம் விற்றவர் துன்டா: “ரத்த இந்தியா’ என்ற பயங்கரவாத கொள்கைக்கான திட்டத்தை லஷ்கர் அமைப்பு உருவாக்கிய போது அதில் துன்டாவைச் சேர்க்கவில்லை. வங்கதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்த பிறகு வயோதிகம் காரணமாகத் துண்டாவை பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்கள் ஒதுக்கி வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் ஓரங்கப்பட்டிருந்த துன்டாவுக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள குடியிருப்பை பயங்கரவாதிகள் வழங்கியிருந்தனர். அங்கு வாசனைத் திரவியங்களை விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார் துன்டா. அதன் பிறகு நாசவேலை சதியுடன் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற போது பிடிபட்டுள்ளார் என்று தில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காவலை நீட்டிக்க போலீஸ் திட்டம்
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அபு ஜுண்டாலை பிடிக்கத் துன்டா தரும் தகவல் மிகவும் உதவியாக இருக்கும் என்று தில்லி போலீஸார் நம்புகின்றனர். அவரிடம் தில்லி போலீஸார் மட்டுமின்றி மத்திய உளவுத் துறை (ஐபி) அதிகாரிகளும் இரவு பகலாக விசாரித்து வருகின்றனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவரை செவ்வாய்க்கிழமை வரை (ஆகஸ்ட் 20) காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அதற்குள் முக்கியத்துவம் வாய்ந்த பயங்கரவாத வழக்குகள் தொடர்பான தகவல்களை துன்டாவிடம் இருந்து பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை என போலீஸார் கருதுகின்றனர். இதையடுத்து, துன்டாவின் காவலை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க நீதிமன்றத்தில் போலீஸார் அனுமதி கோரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
என்றெல்லாம் மத்திய, மாநில அரசின் மீது மக்கள் வெறுப்பு அடைகிறார்களோ அப்பொழுதெல்லாம் குண்டுகள் வெடிப்பதும் அப்பாவிகள் கைது செய்யபடுவதும் நடைபெறும். உடனே மக்களின் மனநிலை மத்திய, மாநில அரசுகளின் மீது நம்பிக்கை வந்து விடும். இது தான் தற்பொழுது இந்தியாவில் நடக்கும் அரசியல். இதை இந்தியாவில் உள்ளவர்களை தவிர மற்றவர்கள் அறிவது மிகவும் கடினம்…