கச்சத் தீவை மீட்போம்: பெரீஸூக்கு கருணாநிதி பதிலடி

karunanidhi_20080619கச்சத்தீவை உச்ச நீதிமன்றம் மூலம் மீட்போம் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸூக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

கச்சத்தீவை ஒப்படைக்க முடியாது என்று பெரீஸ் கூறியதற்கு இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பெரீஸ் தில்லியில் அளித்த பேட்டியில் கச்சத்தீவை ஒப்படைக்க முடியாது என்று கூறியுள்ளார். தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையின்மையை சிங்களவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

அதனால் அவர்கள் எது வேண்டுமானாலும் பேசுவர். வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழர்கள் ஆட்சியைப் பிடித்தாலும், அவர்களுக்கு நிலம், போலீஸ் அதிகாரம் வழங்க முடியாது என்று ராஜபட்சே தெரிவித்துள்ளார். அந்த வகையிலேயே பெரீஸூம் கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பான பத்திரிகையில் ஓர் கட்டுரை வந்துள்ளது. அதில் கூறியுள்ள விவரம்:

1987-ல் ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுள் நான்கில் மூன்று பங்கினர் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டதுதான் 13-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்.

இதில் குறிப்பிடப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பை, இலங்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

அதோடு கிழக்கு மாகாணத்தில் சில ஆண்டுகளாக மாகாண அரசு ஆட்சி செய்து வருகிறது.

எனவே, வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பு என்பது தற்போதைய சூழலில் சாத்தியம் இல்லை.

ஆனால் 13-வது திருத்தத்தில் உள்ளபடி தமிழ் மாகாணத்துக்கு நிலம், போலீஸ் அதிகாரம் வழங்க முடியாது என்று ராஜபட்ச கூறினால், இந்திரா காந்தி, சிரிமாவோ பண்டராநாயகா ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1974-ல் வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

இதனை மத்திய அரசும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கச்சத் தீவினை திரும்பப் பெறுவது தொடர்பாகவும், இலங்கையுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தமே செல்லுபடியாகாது எனச் சுட்டிக்காட்டியும், உச்ச நீதிமன்றத்தில் டெசோ சார்பில் நானே (கருணாநிதி) வழக்கு தொடுத்துள்ளேன்.

பெரிஸ் போன்றவர்களுக்கு உச்ச நீதிமன்றம் மூலம் பதில் கிடைக்கும்.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைமுறைகள் திருப்திகரமாக இல்லை என்று இலங்கையில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். தில்லியில் காங்கிரஸ் தலைவர்களிடம் தமிழர்களின் நிலை தொடர்பாக தெளிவுபடுத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்குப் பிறகாவது மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கிறதா என பொறுத்திருந்துப் பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

TAGS: