பயங்கரவாதி துன்டா மீது நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல்

terrorist_lashkarதில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா அடையாளம் தெரியாத நபரால் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.

லோதி காலனியில் உள்ள போலீஸ் தனிப் பிரிவு அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பாட்டியாலா நீதிமன்றத்துக்கு துன்டாவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் போலீஸார் அழைத்து வந்தனர். அவரைச் சுற்றி 10 சீருடை அணியாத போலீஸாரும், நீதிமன்ற வளாகத்தில் ஆயுதம் தாங்கிய போலீஸாரும் பாதுகாப்புக்காக வந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிலர் “பயங்கரவாதி துன்டாவை கொல்ல வேண்டும்’ என்று கோஷமிட்டனர். அதில் ஒருவர் துன்டாவை முதுகில் குத்தியதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, துன்டாவை போலீஸாரும், வழக்குரைஞர்கள் சிலரும் அரண் போல சூழ்ந்து கொண்டு நீதிபதி ஜெய் தரேஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதி “உங்கள் சார்பில் யாரேனும் வழக்குரைஞர் ஆஜராவார்களா?’ என்று துன்டாவிடம் கேட்டார். “வழக்குரைஞரை வைத்துக் கொள்ளும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை’ என்று துன்டா கூறினார்.

அப்போது வழக்குரைஞர் எம்.எஸ். கான் நீதிமன்றத்தில் ஆஜராகி “துன்டா சார்பில் நான் ஆஜராகிறேன். இதற்கான ஆவணத்தில் துன்டாவிடம் கையெழுத்து பெற காலையில் தில்லி போலீஸ் தனிப் பிரிவு அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து வர தாமதமாகி விட்டது’ என்றார். அப்போது துன்டா “இவரை எனக்குத் தெரியாது. ஆனால், என் சார்பில் கான் ஆஜராக ஆட்சேபம் கிடையாது. அவருக்கு கொடுக்கத்தான் என்னிடம் பணம் இல்லை’ என்றார்.

இதைத் தொடர்ந்து, தில்லி போலீஸ் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் ராஜீவ் மோகன் “நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் மருத்துவப் பரிசோதனைக்கு துன்டா உள்படுத்தப்பட்டார். அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துன்டாவுக்கு பல்வேறு பயங்கரவாத வழக்குகளில் தொடர்பு உள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது தொடர்பாக அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டும். அதனால், அவரது போலீஸ் காவலை மேலும் 10 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

அப்போது நீதிமன்றத்தில் இருந்த சில வழக்குரைஞர்கள் “பயங்கரவாதி துன்டா ஒழிக, துன்டாவுக்கு தூக்குத் தண்டனை விதியுங்கள்’ என்று கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் துன்டாவை ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்த போது சில நபர்கள் அவரைத் தாக்கியது குறித்து நீதிபதியிடம் வழக்குரைஞர்கள் சிலரும், போலீஸாரும் தெரிவித்தனர்.

அதைக் கேட்ட நீதிபதி ஜெய் தரேஜா, “போலீஸ் காவல் முடிந்து அப்துல் கரீம் துன்டா ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவர் முக்கிய வழக்குகளில் தொடர்புடையவர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 327-இன்படி, அவர் மீதான வழக்கு ரகசியமாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். அவரது வழக்குக்கு தொடர்புடைய வழக்குரைஞர்கள், போலீஸார் நீங்கலாக வேறு யாரும் நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டார்.

பின்னர் வழக்கு விசாரணையைத் நீதிபதி தொடர்ந்தார். அப்போது, துன்டாவின் போலீஸ் காவலை நீதிபதி மேலும் நான்கு நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே துன்டாவைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட நபர் தான் பகத் சிங் கிராந்தி சேனை, ஹிந்து சேனை அமைப்புகளைச் சேர்ந்தவன் என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

TAGS: