சீனாவுக்கு ராணுவ பலத்தை காட்ட லடாக்கில் “ஹெர்குலிஸ்’ விமானம்

DAULAT_1557328gபுதுடில்லி: சீனாவுக்கு, நம் ராணுவ பலத்தை காட்டும் வகையில், லடாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்தில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான, “சூப்பர் ஹெர்குலிஸ் விமானம்’ நேற்று தரையிறக்கப்பட்டது.

காஷ்மீரின் லடாக் பகுதியை ஒட்டியுள்ள, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், சீன ராணுவத்தினர், அடிக்கடி ஊடுருவுகின்றனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும், சீன வீரர்கள், அங்கு முகாம்களையும் அமைத்து வருகின்றனர்.

இதையடுத்து, சீனாவுக்கு, ராணுவ பலத்தை காட்டுவதற்கான நடவடிக்கையில், நம் ராணுவம் ஈடுபட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்துக்கு, நம் விமானப் படைக்கு சொந்தமான, சூப்பர் ஹெர்குலிஸ் விமானம், நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விமானம், திட்டமிட்டபடி, அந்த விமான தளத்தில் தரையிறங்கியது.

உலகிலேயே, மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான தளத்தில், இந்திய விமானப் படை விமானம், தரை இறக்கப்பட்டது, முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்த விமானத்தில், காமாண்டிங் அதிகாரி கேப்டன், தேஜ்பிர் சிங் மற்றும் வீரர்கள் சென்றனர். “இந்த விமானத்தின் மூலம், லடாக்கை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும், நம் வீரர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் தளவாடங்களை, எளிதாக கொண்டு செல்ல முடியும்’ என, இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

TAGS: