ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் இன்று செவ்வாய் வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் மாநிலத் தகவல் ஆணையத்திடம் தனது கருணை மனு குறித்து பல்வேறு விவரங்களைக் கோரினார்.
மேலும் லீனா மேரி ஜார்ஜ் என்ற ஆராய்ச்சியாளருக்கு தன்னை சிறையில் பேட்டி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன் எனவும் அவர் தெரிந்து கொள்ள விரும்பியதாக பேரறிவாளனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலை வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் அறையிலிருந்து காணொளி இணைப்பின் மூலம் மாநிலத் தகவல் ஆணையருடன் தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்களை அவர் கோரினார்.
மாநில சிறைத் துறை சார்பில் ஒரு அதிகாரியும் இன்றைய சந்திப்பில் பங்கேற்றிருக்கிறார்.
அப்போது பேரறிவாளன் 1999ஆம் ஆண்டு ஜூன் முதல் தனது கருணை மனுமீது என்னவெல்லாம் உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன, குடியரசுத்தலைவர் தனது மனுவினை நிராகரித்தது தொடர்பான விவரங்கள், தன்னை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்திக்க வந்த ஆராய்ச்சியாளர் லீனா ஜார்ஜுக்கு சிறைத்துறை அனுமதி மறுத்தது குறித்த தகவல்கள், தனது உடல் நிலை குறித்த ஆவணங்கள் எனப் பலவற்றை கோரியிருக்கிறார்.
கோரப்படும் தகவல்களை அரசுத் துறைகள் மறுக்குமானால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் ஆணையரை அணுகலாம் என்ற விதியின் கீழேயே பேரறிவாளனின் தற்போதைய முயற்சிகள் வந்துள்ளன.
அவரது கோரிக்கைகளை மிகவும் அனுசரணையுடன் மாநிலத் தகவல் ஆணைய அதிகாரிகள் கேட்டதாகக் கூறிய பேரறிவாளனின் தரப்பினர் ஆணையத்தின் உத்திரவு பின்னர் வெளியிடப்படும் என்கின்றனர்.
மேலும் சில தகவல்களை பேரறிவாளன் கோரியிருப்பதாகவும், அவை தொடர்பில் மேலும் ஒரு காணொளிப்பேட்டி விரைவில் நடக்கக்கூடும் எனவும் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். -BBC
தம்பி உங்களுக்கு இந்தியாவில் காங்கரஸ் ஆட்சியில் இருக்கும் வரை நியாயம் கிடைக்காது.