அருணாசலத்தில் சீனா ஊடுருவல்

incursionசீன ராணுவ வீரர்கள் கடந்த வாரம் அருணாசலப் பிரதேசத்தின் சக்லகாம் பகுதியில் சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு ஊடுருவி அங்கு இரண்டு நாள்கள் தங்கி சென்றது தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவத்துடன் மோதல் போக்கை தொடரும் விதமாக சீனா இந்த ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் லடாக்கிற்கு அருகில் உள்ள தௌலத் பெக் ஓல்டி பகுதிக்கு அருகில் சீன ராணுவத்தினர் கடந்த ஏப்ரல் மாதம் அத்துமீறி நுழைந்தனர். அங்கு கூடாரங்களை அமைத்துத் தங்கினர். அங்கிருந்த இந்திய ராணுவச் சோதனைச் சாவடியைச் சேதப்படுத்தியதோடு, தகவல் தொடர்புக்கான கேபிள்களையும் துண்டித்தனர். சீனாவின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

சீனாவின் ஊடுருவல் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் கொடியமர்வு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து, தௌலத் பெக் ஓல்டி பகுதியில் இருந்து 21 நாள்களுக்குப் பிறகு சீன வீரர்கள் வெளியேறினர்.

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி சீனாவின் மக்கள் விடுதலை முன்னணி ராணுவம், அருணாசலப் பிரதேசத்தின் உள்ளே வந்தபோது அவர்கள் இந்திய ராணுவ வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தில்லியில் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பினரும் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு ஒருவருக்கு ஒருவர் பதாகைகளை காட்டிக் கொண்டதாகவும் அவை தெரிவித்தன. சீன வீரர்கள் ஊடுருவியபோது, அப்பகுதியில் இந்திய-திபெத் எல்லை போலீஸôரும் இருந்துள்ளனர்.

எனினும், சீன வீரர்கள் உடனடியாக வெளியேறாமல் இரண்டு நாள்கள் அங்கு முகாமிட்டு தங்கியிருந்து பின்னர் வெளியேறியதாக கூறப்படுகிறது. சீனப் படையினருக்கும், எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற 15 நிமிட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே சீனத் துருப்புகள் வெளியேறியதாக இடாநகரிலிருந்து வந்துள்ள அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

“அவர்கள் வந்தது உண்மைதான், ஆனால் தற்போது அவர்கள் வெளியேறி விட்டனர். அங்கு இப்போது இந்திய துருப்புகள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளன’ என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சக்லகாம் பகுதி, கடந்த காலங்களிலும் பல முறை சீன துருப்புகளின் ஊடுருவலைக் கண்டுள்ளது. ஆயினும் அவர்கள் மீண்டும் தங்கள் நிலைக்கு திரும்பி விடுவர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே அமைந்துள்ள இந்தப் பகுதி மீனின் வாலை போன்ற அமைப்பைக் கொண்டதாகும்.

அருணாசலப் பிரதேசம் முழுவதும் தனக்கே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வந்தாலும், இந்தியா அதை ஏற்க மறுத்து வருகிறது. கடந்த 8 மாதங்களில் சீனத் தரப்பில் இருந்து சுமார் 150 முறை ஊடுருவல் நடைபெற்றதாகவும், அவர்கள் தங்கள் பகுதி என்று உரிமை கோரும் பகுதிகளுக்கும் இந்திய ராணுவம் தனது ரோந்துப் பணியின்போது நுழைந்தது உண்டு என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, புதுதில்லியில் உள்ள ராணுவத் தலைமையகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் சீன ஊடுருவல் சம்பவத்தைப் பெரிதுபடுத்தவில்லை.

அருணாசலப் பிரதேசத்தில் சீனத் துருப்புகளின் ஊடுருவல் குறித்து புதுதில்லியில் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “”இது விஷயமாக இந்திய ராணுவத் தரப்பில் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் நாங்கள் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை. மேலும், இத்தகைய சிறிய சம்பவங்களை ராஜீய அளவில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று அவர் பதிலளித்தார்.

முன்னதாக, இந்திய-சீன எல்லைக்கு அருகே சூப்பர் ஹெர்குலிஸ் ரக பிரமாண்ட விமானத்தை இந்திய விமானப்படை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகத் தரையிறக்கியது.

லடாக்கில் தௌலத் பெக் ஓல்டி பகுதியில் உலகிலேயே உயரமான விமானப்படைத் தளத்தில் விமானப்படையின் சி-130 ஜே ரகத்தைச் சேர்ந்த சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தை தரையிறக்கியதன் மூலம் சீனாவுக்கு தனது பலத்தை இந்தியா காட்டியது குறிப்பிடத்தக்கது.

TAGS: